விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி, உத்திரப் பிரதேசத்தை மையம் கொண்டு விவசாயிகள் புதியதாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது யோகி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்து போலீசார், அவரை சிறையில் அடைத்து உள்ளனர். 

அத்துடன், இந்த விவசாயிகள் படுகொலையில் சம்மந்தப்பட்ட அமைச்சர் அஜய் மிஸ்ராவை, பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தான், ஆளும் பாஜகவுக்கு எதிராக ஐக்கிய கிசான் மோர்ச்சா சார்பில் இன்றைய தினம் உயிரிழந்த 4 விவசாயிகளின் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள், பிராத்தனை கூட்டங்கள், மெழுகுவர்த்தி ஊர்வலம் ஆகியவை நடத்தப்படுகின்றன. 

இவற்றுடன், லக்கிம்பூர் கேரி தவிர உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு விவசாயிகள் அமைப்புகள் முடிவு செய்து உள்ளன.

அத்துடன், “அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்காவிட்டால், அடுத்தக்கட்டமாக நாடு தழுவிய போராட்டம் மிக விரைவில் நடத்தப்படும்” என்று, ஐக்கிய கிசான் மோர்ச்சா அறிவித்து உள்ளது. 

அதே போல், “உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தியை, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கொண்டு கரைக்கவும்” விவசாய அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.

மேலும், வரும் 15 ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் உருவபொம்மைகளை எரிக்க ஐக்கிய கிசான் மோர்ச்சா விவசாய அமைப்புகள் முடிவு செய்து உள்ளன. 

குறிப்பாக, டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாய அமைப்புகள் தற்போது உத்தரப் பிரதேசத்தில் தங்களது போராட்ட களத்திற்கான இடமாக மாற்றி வருகின்றன. 

மிக முக்கியமாக, இன்று தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் மாநில அரசுக்கு மிக பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளதால், உ.பி.யில் சட்டம் ஒழுங்கு இன்னும் மோசமடையும் அபாயம் உள்ளதாக உளவுத் துறை மத்திய - மாநில அரசுக்கு அறிக்கையின் மூலமாக கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உளவுத்துறையின் எச்சரிக்கையினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக எடுப்பது தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் அவரது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் படி, உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கூடுதலான போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. 

இவற்றுடன், 20 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு, பதற்றமான பகுதியில் கண்காணிப்பை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளன. 

முக்கியமாக, விவசாயிகள் அமைப்புக்களின் மிக கடுமையான நெருக்கடியை தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரியின் தலைமையில் இங்கு தனி கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது.

அதே போல், வரும் 26 ஆம் தேதி லக்னோவில் கிசான் மகா பஞ்சாயத்தை நடத்த ஐக்கிய கிசான் மோர்ச்சா அமைப்பு முடிவு செய்து உள்ளது.

அதே நேரத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் லக்கிம்பூர் கேரி சம்பவம் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.