கொரோனாவால் உயிரிழந்த நண்பனின் மனைவியை, இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான சேத்தன் குமார் என்பவர், அங்குள்ள ஹனூர் டவுனை சேர்ந்த 30 வயதான அம்பிகாவுக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. 

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், சேத்தன் குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவனை  ஊழியராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்த சூழலிவல் தான், நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், சேத்தன் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எதிர்பாரத விதமாக உயிரிழந்து உள்ளார். இதனால், அம்பிகா அப்படியே கலங்கிப் போய் உள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவனை இழந்த அம்பிகா, ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் சேத்தன் குமாரின் நண்பர் லோகேஷ், ஆகியோர் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை காப்பாற்றி உள்ளனர்.

இதனால், அவர் உயிர் பிழைத்த நிலையில், அடுத்த சில நாட்களில் உயிரிழந்த சேத்தன் குமாரின் நண்பன் லோகேஷ், நண்பனின் மனைவியான அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார். 

இதற்கு, ஒரு கட்டத்தில் அம்பிகாவும் சம்மதம் தெரிவித்து உள்ளார். இது குறித்து, அவர்கள் வீட்டினரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் தான், கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அம்பிகாவுக்கும், லோகேசுக்கும் பெங்களூருவில் முறைபடி திருமணம் நடந்து உள்ளது.

அத்துடன், கொரோனாவில் உயிரிழந்த நண்பரின் மனைவியை, அவரது நண்பர் மறுமணம் செய்துகொண்ட சம்பவத்திற்கு லோகேசிற்கு பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.