“மருதமலை” படத்தில் வரும் வடிவேலு காமெடியைப் போல், 5 பேரை கல்யாணம் செய்து கழற்றிவிட்ட பெண் ஒருவர், தன்னுடைய 6 வது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜுன் - வடிவேல் நடிப்பில் வெளியான “மருதமலை” படத்தில் மிகவும் பிரபலமான காமெடி ஒன்று இருக்கும். அதாவது, ஏட்டு ஏகாம்பரமாக நடிகர் வடிவேலு தலைமைக் காவலராக இருப்பார். அப்போது, மாலையும் கழுத்துமாகக் காதல் ஜோடி ஒன்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து ஏட்டு ஏகாம்பரமான நடிகர் வடிவேலுவிடம் “எங்களை காப்பாத்துங்க சார். நாங்க லவ்வர்ஸ். எங்க காதலுக்கு எங்க வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதான் நாங்க வீட்டை விட்டு ஓடி வந்துட்டோம்” என்பார்கள். அப்போது, ஏட்டு ஏகாம்பரமான நடிகர் வடிவேலு, “இந்த ஏட்டு ஏகாம்பரம் இருக்கும் போது பயமா?” என்பது போல் வடிவேலு வசனம் பேசிக்கொண்டு இருப்பார். அப்போது, ஒரு 4 பேர் காவல் நிலையத்திற்குள் திபு திபு என்று ரண கொடூரமாக ஓடி வருவார்கள்.

வந்த 4 பேரும், கோரசாக, “ஐயா, அவ எங்க பொண்டாட்டியா.. எங்களைக் கழற்றி விட்டு விட்டு, 5 வதா, அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஓடி வந்துட்டா சார். என் கூடவே என் பொண்டாட்டியை அனுப்பி வையுங்கள் ஐயா” என்று 4 பேரும் அந்த ஒரு பெண்ணுக்காகப் போட்டிப் போடுவார்கள். 

சினிமாவில் நகைச்சுவையாக வந்த இந்த காட்சி, தற்போது கர்நாடகா மாநிலத்தில் உண்மையிலேயே நடந்துள்ளது, அனைத்து தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கம்பினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சந்துரு என்ற இளைஞன், பார்ப்பதற்கு இளம் பெண் போன்று தோற்றம் இருக்கும் ஒரு பெண்ணுடன், அங்குள்ள ஒரு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

“எங்களைக் காப்பாற்றுங்கள் சார்” என்று, கூறிக்கொண்டே காதலர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், “நீங்கள் யார்?” என்று விசாரித்துள்ளனர்.

“நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறோம். தங்களுடைய காதலுக்கு எங்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. நாங்கள் இருவரின் உயிருக்கும் கடும் அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால், நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்” எங்களைக் காப்பாற்றுங்கள் சார்” என்று காதலன் சந்திரு கூறியுள்ளான்.

இதனையடுத்து, காதலர்கள் இருவரையும் போலீசார் ஆசுவாசப்படு அங்கு அமர வைத்துள்ளனர். அந்த நேரம் பார்த்து, அந்த காவல் நிலையத்தில் திபு திபு என்று 5 பேர் அங்கு ஆவேசமாக வந்துள்ளனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், “யார் நீங்கள்?” என்று, கடுமையான குரலில் கேட்டுள்ளார்கள். அப்போது அவர்கள் 5 பேரும் ஒன்றாகச் சேர்ந்து கோரசாக, “சந்துரு அழைத்து வந்தது எங்களுடைய மனைவி” என்று, கூறியுள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார், அந்த காதலர்களைப் பார்த்துள்ளனர். அவர்கள் இருவரும் தலையைக் கீழே போட்டு நின்றுள்ளனர். இதனால், அங்கிருந்த போலீசார் அதிர்ச்சியில் இருந்து சற்றும் மீள முடியாமல் அப்படியே ஆடிப்போனார்கள். 

இதனையடுத்து, நிதானத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தது. விசாரணையில், “அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதும், அவருக்கு தற்போது 38 வயது ஆவதும்” தெரிய வந்தது. அதை அவர் ஒப்புக் கொண்டார். 

தற்போது “மனைவியை என்று உரிமை கோரி வந்துள்ள சிக்கமகளூருவை சேர்ந்த பசவராஜ், பெங்களூருவைச் சேர்ந்த கிரண், ரமேஷ், துக்காராம் மேலும் ஒரு இளைஞன் ஆகிய 5 பேரையும் பிரியா, காதலித்து அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு, அவர்களிடம் சிறிது காலம் குடும்பம் நடத்திவிட்டுத் அதன் பிறகு பிரியா தலைமறைவாகி விடுவார். 

இப்படி காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 பேரில் 2 பேருக்குப் பிரியா குழந்தையும் பெற்றுக்கொண்டதும்” தெரிய வந்தது.

அந்நிலையில் “ 22 வயதான சந்துருவை நான் இப்போது தீவிரமாகக் காதலிக்கிறேன் என்றும், 6 வதாக அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும்” பிரியா கூறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிரியாவும், “சந்துரு உடன் தான் வாழ்வேன்” என்று அடம் பிடிக்கப் பதிலுக்கு, 22 வயதான சந்துருவும் “பிரியாவுடன் தான் வாழ்வேன்” என்று, அடம் பிடித்துள்ளார்.

ஆனால், போலீசார் அந்த இளைஞருக்கு அறிவுரை கூறி உள்ளனர். “இந்த 5 கணவருக்கும் ஏற்பட்ட நிலைமை நாளை உனக்கு வரும். அதனால், இப்போது நீ யோசித்துக்கொள். நீ இப்போது தான் வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறாய். நீ உன் வாழ்க்கையை இளமையிலேயே தொலைத்து விடாதே” என்று அறிவுரை கூறி உள்ளனர். ஆனால், போலீசாரின் அறிவுரையை சந்துரு ஏற்றுக்கொள்ள வில்லை. 

குறிப்பாக, “காதலி பிரியாவுக்கு ஏற்கனவே 5 திருமணம் செய்துகொண்டது பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும், அவருக்கு தற்போது 38 வயது ஆவது குறித்தும் எனக்குக் கவலை இல்லை” என்றும், சந்துரு கூறி உள்ளார். ஆனால், பிரியாவின் 5 கணவன்மார்களும் “எங்கள் மனைவி எங்களுக்கே வேண்டும். நாங்கள் யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்” என்று கூறி, அங்கேயே அழுது அடம் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து, சந்துருவிடம் அவரது பெற்றோர் குறித்து போலீசா விசாரித்தபோது, அவர் தாய் தந்தை இல்லாதவர் என்றும், அவரை அவருடைய அக்கா தான் வளர்த்து வருகிறார் என்பதையும் போலீசார் தெரிந்துகொண்டனர். இதனையடுத்து, சந்துருவின் அக்காவை காவல் நிலையம் வரவைத்து, சந்துருவிடம், அவரது அக்காவைப் பேச வைத்துள்ளனர். வளர்த்த அக்கா பேசியும் சந்துரு எதையும் கேட்கவில்லை. இதனால், போலீசார் எந்த முடிவும் எடுக்க முடியாமல் மாட்டிக் கொண்ட முழித்தனர்.

இதனால், மாற்று யோசித்த போலீசார், “முறைப்படி விவாகரத்து பெறாமல் சந்துருவைத் திருமணம் செய்து கொண்டது தவறு” என்று, பிரியா மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, சந்துருவை அவரது அக்காவுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.