காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் ஆனதால், தனது மகள் மற்றும் மகனை கொன்ற விதவை பெண், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா போரபுரா கிராமத்தைச் சேர்ந்த சோமா என்பவர், தன்னுடைய மனைவி 30 வயதான நேத்ராவதி உடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு 9 வயதில் மகள் சோபிதா, 7 வயது மகன் நந்தீஷ் ஆகிய குழந்தைகள் உள்ளனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன் சோமா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவரது 30 வயது மனைவி நேத்ராவதி, தனது மகன் மற்றும் மகளுடன் அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இப்படியாக, தனது இரு பிள்கைளுடன் தனியாக கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன், அந்த பெண்ணுக்கு காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த நபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், அந்த பெண்ணின் காதலனான அந்த குறிப்பிட்ட இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல், அந்த நபரை காதலித்து வந்த பெண்ணிற்குத் தெரிய வந்தது. இதனால், கடும் மனமுடைந்த நேத்ராவதி, இந்த உலக வாழ்க்கையை விட்டுச் செல்ல முடிவு செய்தார்.

அதன் படி, தனது மகள் சோபிதா மற்றும் மகன் நந்தீஷ் ஆகியோருக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்து அவர்களைக் கொலை செய்து உள்ளார். அதன் பிறகு, விஷம் கலந்த உணவை அவரும் உட்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, காலையில் வெகு நேரம் ஆகியும் அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவைத் தட்டிப் பார்த்து உள்ளனர். ஆனால், வெகு நேரம் ஆகியும் கதவை யாரும் திறக்காத நிலையில், அக்கம் பக்கத்தினருக்கு மேலும் சந்தேகம் வந்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக, அந்த பகுதி மக்கள் அந்த வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்து உள்ளனர். அப்போது, வீட்டுக்குள் நேத்ராவதி, சோபிதா, நந்தீஷ் ஆகிய 3 பேரும், வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்து உள்ளனர். 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து அங்குள்ள கே.எம்.தொட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். அதன் படி, அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டைப் பார்வையிட்டனர். இதையடுத்து, அந்த வீட்டின் கதவை உடைத்து 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை  நடத்தினர். இதில், அந்த விதவை பெண்ணின் காதல் விசயம் தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

அதே போல், கோவையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.