காதல் திருமணம் செய்த தம்பதியை பெண்ணின் தம்பியே அடித்து ஆணவ கொலை செய்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை பகுதியைச் சேர்ந்த வினோத், அங்குள்ள கொப்பல் மாவட்டம் கரடகி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அதே போல், அங்குள்ள பாகல்கோட்டை பகுதியைச் சேர்ந்த திரிவேணி என்ற பெண், வினோத்திற்கு அறிமுகம் ஆகி உள்ளார். 

இதனையடுத்து, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். வினோத்தும் - திரிவேணியும் ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் கதை, திரிவேணியின் வீட்டிற்குத் தெரிய வந்தது. ஆனால், அவர்கள் இந்த காதலை ஏற்றுக்கொள்ளாமல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன், காதலனை சந்திக்க விடாமல், அவருடன் பேச விடாமல் பலவித முட்டுக்கட்டைகளும் போட்டு உள்ளனர். ஆனாலும்,  திரிவேணி தனது காதலில் விடப் பிடியாக நின்று உள்ளார். ஒரு கட்டத்தில் தன் பெற்றோரின் எதிர்ப்பு கடுமையாகவே, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் இருவரம் திருமணம் செய்துகொண்டனர்.

இப்படியாக, அவர்கள் காதல் திருமணம் செய்து 6 மாதங்கள் கடந்த நிலையில், அந்த காதல் தம்பதிகளின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்றுகொண்டிருந்தது. காதல் திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குப் பிறகு, வினோத் தனது மனைவி திரிவேணியை தான் வேலை பார்த்து வரும் வங்கியிலேயே பணிக்குச் சேர்த்து விட்டார். இதனால், அவர்கள் 2 பேரும் கரடகி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இப்படி மகிழ்ச்சியாக ஊன்றிக்கொண்டிருந்த அவர்களது காதல் வாழ்க்கையில், நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்ததும் வினோத்தும், திரிவேணியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தை வழி மறித்து நின்ற சிலர், வினோத்தையும் அவர் மனைவி திரிவேணியையும் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கி உள்ளன். இந்த கொடூர தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த திரிவேணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன், பலத்த காயம் அடைந்த வினோத்தும், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தார். 

இந்த கொடூர சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து உள்ளனர். ஆனால், பொது மக்கள் வருவதைப் பார்த்த அந்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து வினோத்தையும், திரிவேணியையும் மீட்டு அக்கம் பக்கத்தினர், கரடகி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, காத்திருந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்குப் போராடிய வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு பின்னர் திரிவேணியின் உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், “வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதால் திரிவேணியையும், வினோத்தையும், திரிவேணியின் தம்பி அவினாஷ் உள்ளிட்ட சிலர் இரும்பு கம்பியால் அடித்ததும், இதில் திரிவேணி உயிரிழந்ததும்” தெரிய வந்தது. 

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிரமாகச் சிகிச்சை பெற்று வந்த வினோத்தும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர ஆணவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான திரிவேணியின் தம்பியான அவினாசை போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து, அவனை போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். அத்துடன், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.