கொரோனா பரவலுக்கான அச்சம் அதிகமுள்ள இந்த நேரத்தில், நம் எல்லோரையும்விடவும் முன்களத்தில் நின்று கொரோனாவோடு நேருக்கு நேர் போராடுபவர்கள், மருத்துவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்துக்கு, செவிகள் சாயாமலே இருக்கிறது. கர்நாடகாவில் அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் தாலுகா சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த மருத்துவரொருவர், கடந்த மாதம் உயர் அதிகாரியின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள், முதல்-மந்திரி பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் பணிக்கு திரும்பினார்கள்.
 
இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, அதனால் உயிரிழந்த ஏராளமான மருத்துவர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. இதனால், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த டாக்டர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, டாக்டர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்களுக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கர்நாடகம் முழுவதும் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி நாளை முதல் கர்நாடகத்தில் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதன்காரணமாக நாளை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெளிபுற நோயாளிகள் பிரிவு மூடப்பட உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் நோயாளிகளின் விவரம் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படாது என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவர்களின் இந்த முடிவால் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாக்டர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த உள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு இன்று (திங்கட்கிழமை) அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டால், நாளை நடக்கும் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம்தான், கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் 24 ஆண்டுகளாக அரசு மருத்துவராக பணியாற்றி வந்த  53 வயதான ரவீந்திரநாத் என்ற மருத்துவர் கொரோனா சிறப்பு வார்டில் தினமும் பணியாற்றுமாறு அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்ட செய்தி சர்ச்சையானது. இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக, தொடர்ச்சியாக பணிசெய்யும் நிபந்தனையை மருத்துவர் ரவீந்திரநாத் ஏற்க மறுத்துள்ளார். இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடத்தி அதிகாரிகள் ரவீந்திரநாத்தை கட்டாய விடுப்பில் அனுப்பி இருந்தனர்.

தண்டனை முடிந்து பணிக்கு திரும்பியபோதும், அதிகாரிகள் ரவீந்திரநாத்துக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து 24 ஆண்டுகளாக தான் செய்து வந்த மருத்துவர் பணியை ராஜினாமா செய்த ரவீந்திர நாத், ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டுநராக களமிறங்கி விட்டார்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவன் என ஆட்டோவில் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் வாடிக்கையாளர்கள் கண்ணில்படுமாறு எழுதி வைத்து ஆட்டோ ஓட்டினார். விஷயம் சர்ச்சையான பிறகு, அவரை அழைத்து பேசினர் அதிகாரிகள். 

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மருத்துவர் ரவீந்திரநாத், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டு தன்னை பலிகடா ஆக்கியதாகவும், அதனால் 15 மாதங்களாக ஊதியம் நிறுத்தப்பட்டு வேறு வழியின்றி சொந்த ஊரில் ஆட்டோ ஓட்டுவதாகவும் பேட்டியளித்தார். அவரது ஆட்டோவில் 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானவன்' என எழுதியிருந்தது ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் தலையிட்டு மாநில சுகாதார அமைச்சர், அவரை மாவட்ட சுகாதார அதிகாரியாக நியமிக்க உத்தரவிட்டார். 2 ஆண்டு போராட்டத்திற்கு பின் மீண்டும் தனக்கு தகுதியான பதவியில் மருத்துவர் ரவீந்திரநாத் அமர்ந்துள்ளார்.

இப்படி தொடர் சர்ச்சைகளும், பின் அரசு தலையிட்டு அதை சரிசெய்ய முயல்வதுமாக கர்நாடக மருத்துவர்களின் வாழ்வு போராட்ட களமாகவே மாறிவிட்டது.