“ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி இன்னும் வரவில்லை” என்று, மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ள நிலையில்,  “ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது” என்று, ராகுல்காந்திக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில் அளித்துள்ளார்.

கொரோனா பெந்தோற்றால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு தற்போது சற்று மீண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். எனினும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவி வருவதாக செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், “கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை, பாஜக தலைமையிலான மத்திய அரசு சரியாக கையாளவில்லை” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். 

அத்துடன், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்தும் ராகுல் காந்தி தொட்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

இது தொடர்பாக இன்று காலை தனது டிவிட்டரில் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, “ஜூலை வந்து விட்டது. ஆனால், தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி?” என்று, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்குக் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் “ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கெனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன். தற்போது ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்சினை?” என்றும், அவர் கேள்வி கேட்கும் விதமாக சாடி உள்ளார்.

அதன் படி, “இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குகிறது என்றும், தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு 15 நாட்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது” என்றும், அவர் கூறியுள்ளார்.

“ஆனால், கொரோனா தொற்று காலத்தில் சில தலைவர்கள், அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இந்த தலைவர்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்றும், ஆனாலும் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

அத்துடன், “ மத்திய அரசை குறைசொல்லி, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “ராகுல் காந்தி, அரசின் தரவுகளைப் பார்க்கவில்லையா? என்றும், ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது” என்றும், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மிகவும் காட்டமாகவே பதில் அளிக்கும் வகையில் விமர்சித்து உள்ளார்.