பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே ஆண் காவலரால் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் ஜாப் 10 காவல் நிலையத்தில் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார்.

இந்த ஜாப் 10 காவல் நிலையத்தில், காவல் நிலைய மேற்பார்வையாளராக சத்ருக்னா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சம்பவத்தன்று ஜாப் 10 காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களும், பாதுகாப்புப் பணிகளுக்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது, அந்த காவல் நிலையத்தில் அமுதா என்ற பெண் காவலரும், காவல் நிலைய மேற்பார்வையாளரான சத்ருக்னா சிங் ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர்.

அப்போது, அந்த பெண் காவலர் மீது சற்று சபலப்பட்ட அந்த ஆண் காவலர், தனது ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல், தனது கடமையை தவிர, மக்களின் பாதுகாவலன் என்பதையும் மீறி செயல்பட்டிருக்கிறார். அதாவது, காவல் நிலையத்தில் தனியாக இருந்த பெண் காவலரிடம், அவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். 

இதனால், அந்த பெண் காவலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் காவலரைக் கட்டாயப்படுத்த முடியாமல் பின்வாங்கிய அவர், இதனை வெளியே சொல்லக்கூடாது என்றும், அந்த பெண் காவலரை மிரட்டி உள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அமுதா, இது குறித்து தனது உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளர், இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விசாரணை நடத்தினார். இதில், அந்த புகார் உண்மை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, காவல் நிலைய மேற்பார்வையாளரான சத்ருக்னா சிங்கை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

இந்த பிரச்சனை அந்த மாநிலத்தின் ஊடகத்தில் வெளியாகி, பெரும் பிரச்சனையாக மாறிய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “"பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், அவரை முதற்கட்டமாகப் பணி இடை நீக்கம் செய்துள்ளோம்” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், குற்றம்சாட்டப்பட்ட காவலருக்கு எதிராக மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.

இதனிடையே, பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே சக ஆண் காவலரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.