ஃபேஸ்புக் மூலம் பெண்களுக்கு காதல் வலை விரித்து வந்த ஐடி ஊழியர் ஒருவர் ப்ளே பாயாக மாறி 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் சொத்துகளை அபகரித்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தா நகர் பகுதியை சேர்ந்த விஜய பாஸ்கர் என்ற இளைஞர், அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

விஜய பாஸ்கருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்து உள்ளது. தனக்கு திருமணமான தகவலை மறைத்து விட்டு, ஃபேஸ்புக்கில் பல பெண்களுடன் அவர் தொடர்ச்சியாக பேசி வந்து உள்ளார். 

முக்கியமாக, அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை குறி வைத்து அவர் பழகி வந்து உள்ளார்.

முதலில், ஃபேஸ்புக் மூலம் பெண்களிடம் நட்பாக பழகி வருவது அவரது வாடிக்கையாகும். அதன் பின்னர், சம்மந்தப்பட்ட இளம் பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி விடுவாராம். 

மேலும், அடுத்தகட்டமாக அந்த இளம் பெண்களிடம் ஆசை ஆசையாக பேசி அவர்களது மனதை மாற்றி திருமணமும் செய்து கொள்வது அவரது வாடிக்கை என்றும் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, முதல் வேலையாக அந்த பெண்களின் நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர் தப்பி ஓடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.

குறிப்பாக, அவரது முதல் மனைவியை தவிர மொத்தம் 4 ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை குறிவைத்து ஃபேஸ்புக் மூலமாக காதலித்து அவர்களைத் திருமணமும் செய்துகொண்டு, கல்யாணத்துக்குப் பிறகு அந்த பெண்களிடம் இருந்து பணத்தையும், அவர்களுடைய நகைகளையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று உள்ளார்.

இப்படியாக அந்த இளைஞர், 6 வதாக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலை பகுதியை சேர்ந்த சௌஜன்யா என்ற இளம் பெண்ணையும் இதே போல் காதலித்து அவர் கல்யாணம் செய்து உள்ளார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன் விஜய பாஸ்கர் அடிக்கடி தனது காருக்குள் சென்று நீண்ட நேரமாக செல்போனில் யாருடேனே தனியாகப் பேசுவதை மனைவி சௌஜன்யா கவனித்து உள்ளார். 

இதனால், கணவன் மீது சந்தேகமடைந்த அவர் மனைவி, கணவன் விஜய பாஸ்கரின் செல்போனை எடுத்து பார்த்து உள்ளார். அதில், சிவானி என்ற பெண்ணிடம் விஜய பாஸ்கர் வீடியோ காலில் பேசியிருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார்.

இதனால், பயந்துபோன அவர் மனைவி, கணவனின் இந்த செயல் குறித்து, தனது குடும்பத்தினரிடம் அந்த இளம் பெண் கூறி அழுதுள்ளார். இதனை அடுத்து வந்த அவரது உறவினர்கள், கணவன் விஜய பாஸ்கரை அடித்து விசாரித்து உள்ளனர்.
 
அப்போது, அவர் ஃபேஸ்புக் மூலம் பழகி 6 பெண்களிடம் செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், அவரது செல்போனை பறித்து வைத்துக்கொண்டு, அவருக்கு தர்ம அடி கொடுத்து உள்ளனர். 

மேலும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் முன்னிலையில் விஜய பாஸ்கரை, அவரது 6 வது மனைவி சௌஜன்யாவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்தனர். இதனையடுத்து, அவரை அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அந்த குடும்பத்தினர் ஒப்படைத்து உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடமும் புகாரை பெற்றுக்கொள்ளவும், அது தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.