ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் இஸ்ரோ சார்பில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் விண்வெளி துறையில் தனியார்த் துறைக்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த தகவலை இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், விண்வெளித்துறையில் தனியார்த் துறையை ஈடுபடுத்தும் பணி தற்போது துவங்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுகணைதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ராக்கெட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டு ஏவுகணை தளங்கள் உள்ளன.

தனியார் நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தால், அவர்கள் அதற்காக இஸ்ரோவின் சொத்துக்களை பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பிக்கலாம். தனியார்த் துறையின் தேவைகளின் அடிப்படையில் விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செயல்முறையைத் துவங்க விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களின் தேவைகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இஸ்ரோவின் மையங்களில் ஒன்றான திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயற்கைக்கோள் ஏவுதல் மேற்கொள்வது கடினம். அடுத்து வரும் மாதங்களில் நிலைமையைப் பொறுத்து செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

  -பெ.மதலை ஆரோன்