இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு, இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. 

இந்திய சினிமாத் துறையில் தான் குறிப்பாக தமிழ் சினிமாவில் தான் வயதானால் அல்லது புகழின் உச்சியில் இருக்கும் போதே மூத்த மற்றும் முன்னணி நடிகர்கள் அரசியல் பிரவேசம் எடுத்து வருகின்றனர்.

தற்போது, இந்த அசியல் பிரவேச சூழல் இந்திய கிரிக்கெட்டிலும் உட்புகுந்து கொண்டது என்பது தான் உண்மை. 

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து, ஓய்வு பெற்ற பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பல்வேறு அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதுண்டு.

அதன்படி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

அதேபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பிர், கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் சேர்ந்தார். அதன் பிறகு, தேர்லில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

அத்துடன், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ் ஜோத் சித்து, கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், முதலில் பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
 
குறிப்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பட்டோடி என்பவர் தான், முதல் கிரிக்கெட் வீரராக அரசியலில் களம் கண்டார். இவர் முதலில் ஹரியான மாநிலத்தின் பிவானி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தோல்வியைத் தழுவினார். அதன் பின், மத்தியப் பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதிலும், அவர் தோல்வியை தழுவியதால், அரசியல் வாழ்க்கையில் இருந்து பட்டோடி வெளியேறினார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக இந்திய கிர்க்கெட் அணியின் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மகேந்திர சிங் தேனியைச் சுற்றி தற்போது, அரசியல் பேச்சுகளும் எழத் தொடங்கி விட்டன. “ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணையப் போகிறார்” என்று, தகவல்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கி உள்ளன. இதனால், தோனி அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ள கருத்தில், “பாஜகவில் தோனி இணைவார் என்றும், இது குறித்து பல நாட்களாக அவர் பேசி வருகிறார்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வரும்  2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்” என்று, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, “தோனி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்று உள்ளார். 

அதைத் தவிர, வேறு ஏதிலிருந்தும் அவர் ஓய்வு பெறவில்லை. அவர் தடைகளை எதிரத்து போராடக்கூடியவர். கிரிக்கெட்டில் ஒரு அணியை திறன்பட வழிநடத்திய அவரது திறமை பொது வாழ்விற்கும் வேண்டும். இதனால், தோனி 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல்,  பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, தோனியின் ஓய்வு தொடர்பாக தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், “தோனி தனது தனித்துவமான கிரிக்கெட் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். இனி தேவைப்படும் நேரங்களில் இந்திய கிரிக்கெட்டை வலுப்படுத்த தோனி மேலும் உதவுவார். அவருடைய எதிர்கால திட்டங்களுக்கு என் வாழ்த்துகள்”

“உலக கிரிக்கெட் ரசிகர்கள் உங்களது ஹெலிகாப்டர் ஷாட்களை நிச்சயம் தவற விடுவார்கள் மஹி” என்றும், அமித் ஷா புகழாரம் சூட்டி உள்ளார். இதனால், தோனிக்கும் அரசியல் எதிர்காலம் இருக்கலாம் என்றும், டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “தோனி தனது 2 வது இன்னிங்ஸ் அரசியலை நோக்கி இருக்கப் போகிறதா? கிரிக்கெட் வர்ணனையாளராக, பயிற்சியாளராகத் தடம் பதிப்பாரா? அல்லது ராணுவ பனியில் அவருக்குத் தணியாத ஆர்வம் இருப்பதால் அதை நோக்கிப் பயணப்படப் போகிறாரா?” என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.