நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 

இதனைத் தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்து வருகின்றது. வளர்ந்த நாடுகளிலும் அதன் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. 

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பலகட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தியது. போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்தது. இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளதாக நாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில் தாங்கள் அப்படி எந்த அறிக்கையும் தரவில்லை, இது வெறும் வதந்தி என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இன்றைய தினம் எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாகவும், சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், புறநகர் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதெல்லாம் ரெயில் சேவை ரத்தும் நீட்டிக்கப்பட்டது.

கடந்த மே 12ந் தேதியில் இருந்து ராஜ்தானி ரெயில் வழித்தடங்களில் 12 ஜோடி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 1ந்தேதியில் இருந்து 100 ஜோடி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதைத்தவிர வழக்கமான எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் ஆகஸ்டு 12ந்தேதிவரை (இன்று) ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரெயில்கள் செப்டம்பர் 30ந்தேதிவரை ரத்து செய்யப்படும் என்றும், சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்றும் 3 நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், அதை ரெயில்வே நிர்வாகம் மறுத்தது.

இந்நிலையில் வழக்கமான ரெயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரடங்குக்கு முன்பாக இயக்கப்பட்டு வந்த வழக்கமான எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் அனைத்தும் மறுஉத்தரவு வரும்வரை (காலவரையின்றி) ரத்து செய்யப்படுகிறது. மற்றபடி, தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.

மும்பையில் மாநில அரசின் வேண்டுகோளின்பேரில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பயணம் செய்வதற்காக குறைந்த அளவில் புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரெயில்களும் தொடர்ந்து இயக்கப்படும்.

சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளின் ஆதரவு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலவரையின்றி ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால், நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று ரெயில்வே நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.