இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, தங்களை அச்சுறுத்தியதாக சீனா பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளதால், எல்லையில் பதற்றம் இன்னும் அதிகரித்து உள்ளது.

இந்தியா எல்லையான லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் சீனா தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறது. 

குறிப்பாக, அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் தேதி நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீனா ராணுவம் தரப்பிலும் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, சீனா தனது ராணுவத்தை அங்குக் குவித்த நிலையில், இந்தியாவும் தனது பங்கிற்கு ராணுவத்தை வழக்கத்தை விட அதிக அளவில் அங்கு நிறுத்தியது. இதனால், எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்தன.

இதன் காரணமாக, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ மந்திரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் அடுத்தடுத்து நடைபெற்றது. ஒவ்வொரு முறை பேச்சு வார்த்தை நடத்தப்படும் போதும், எல்லையில் இருந்து சீனா ராணுவம் பின் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனாலும், அவ்வப்போது. சீனா தனது எல்லை தாண்டிய அத்து மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியாவின் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டி, இந்திய வீரர்கள் அங்குள்ள பாங்கோங் ஏரி சமவெளிப் பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, சீன ராணுவம் தற்போது பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்டார்.

எனினும், “சீனாவை எச்சரிக்கை வகையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? அல்லது சீனாவின் வீரர்களை நோக்கி இந்தியா இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்தியதா?” என்பதைப் பற்றி சீனா எதுவும் தெரிவிக்க வில்லை.

மேலும், “இதற்கு உரியப் பதில் நடவடிக்கை கொடுத்தோம்” என்றும் சீனா கூறி உள்ளது. சீனாவின் இத்தகையான குற்றச்சாட்டு பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

அதன்படி, 

- சீனா எடுத்த அந்த எதிர் நடவடிக்கை என்ன? 
- சீனா மீண்டும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதா? 
- சீனா தனது வீரர்களை மீண்டும் இந்திய எல்லைக்கு அனுப்பியதா? 
- துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. 

இப்படியான எந்த கேள்விகளுக்கும் சீனா தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. அத்துடன், இந்த குற்றச்சாட்டில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவதையே சீனா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனால், முன் எப்போதும் போல இந்திய எல்லையில் சீனா அத்து மீறிவிட்டு, இந்தியா மீது பழிபோடுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இந்தியா தரப்பில் இன்னும் எந்தவித பதில்களும் அளிக்க வில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்திய தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா சார்பில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா - சீனா இடையே உண்மையாகவே என்ன மாதிரியான பிரச்சனைகள் நடக்கிறது என்பது மட்டும் மர்மமாகவே இருக்கிறது.

இதன் காரணமாக, லடாக்கில் மீண்டும் இரு நாட்டு எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.