காரின் உள்ளே வைத்து பச்சிளம் சிறுமியை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் பூட்டிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், சிறுமியின் பெற்றோர் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அடுத்து உள்ள பாலராமபுரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அந்த பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் தனது மனைவி மற்றும் தனது 3 வயது குழந்தையுடன் தனது காரில் சென்று உள்ளார். 

அப்போது, அவர்கள் காரில் மிகவும் வேகமாகச் சென்றதாகக் கூறி, அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அத்துடன், காரை தடுத்த போலீசார், வேகமாகச் சென்றதாகக் கூறி 1500 ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார்கள். 

இதனால், வேறு வழியில்லாமல் அந்த அபராத தொகையை செலுத்திய சிறுமியின் தந்தை சிபு, அப்போது அந்த வழியாகச் சென்ற மற்ற வாகனங்களைக் கவித்திருக்கிறார். பின்னர், “இங்கு, செல்லும் கார்கள் எல்லாம் அதி வேகமாகவே செல்கிறதே என்றும், அதையெல்லாம் ஏன் மடக்கிப் பிடிக்கவில்லை?” என்றும், அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதனால், அவர் மீது கோபம் அடைந்த போலீசார், சிபுவின் காரை லாக் செய்து விட்டு, சாவியை எடுத்துக்கொண்டு உள்ளனர்.

அப்போது, சிபுவும் அவரது மனைவி அஞ்சனாவும் காருக்கு வெளியே நின்ற நிலையில், சிபுவின் 3 வயது பச்சிளம் குழந்தை மட்டும், காருக்குள் இருந்திருக்கிறார். 

அப்போது, காருக்குள் தனியாக சிக்கித் தவித்த அந்த பச்சிளம் குழந்தை, சத்தம் போட்டு அழுது துடித்திருக்கிறாள். 

குழந்தை அழுவது பற்றி சிபுவும், அவரது மனைவியும் போலீசாரிடம் முறையிட்டும், அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத போலீசார், கார் சீஸ் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, “நாங்கள் சட்டப்படி தான் நடக்கிறோம்” என்றும், சட்டம் பேசி உள்ளனர்.

குறிப்பாக, “3 வயது பச்சிளம் குழந்தை, காரில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி தேம்பித் தேம்பி அழுததை, அங்கிருந்த போலீசார் கண்டுகொள்ளாமல், சாவியை எடுத்துக்கொண்டு போனதாகவும்” கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாயார், “குழந்தை காருக்குள் கத்தி அழுவதை” தனது செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார்.

இதனால், இன்னும் ஆத்திரம் அடைந்த போலீசார், சிபு போலீசாரை தாக்கியதாகக் கூறி, வழக்கு பதிவு செய்ய முயன்று உள்ளனர்.

ஆனால், சாலையில் சென்ற பயணிகள் அங்கு கூடி நியாயம் கேட்டு, போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி அவர்களை போலீசார் விடுவித்து உள்ளனர்.

இதனையடுத்து, தனது 3 வயது குழந்தை காருக்குள் மாட்டிக்கொண்டு அழும் வீடியோவை வெளியிட்ட அவரது தந்தை சிபு, இது குறித்து பேசும் போது, “நான் போலீசாருக்கு பயந்து இது வரை எதுவும் செய்யாமல் இருந்தேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

மேலும், “ஆற்றிங்கல் பகுதியில் பெண் சிவில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது மீடியாக்களில் வெளியானதால் தைரியமாக நானும் வீடியோவை வெளியிட்டேன்” என்றும், சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

இதனிடையே, கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் காரினுள் வைத்து சிறுமியை போலீசார் பூட்டிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், தற்போது தான் அந்த சிறுமியின் பெற்றோர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரில், சம்மந்தப்பட்ட பாலராமபுரம் போலீசார் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.