ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயன்று வரும் நிலையில், தற்போது “திருத்தம்  செய்ய அவசியம் ஏன்?” என்று, கேள்விகள் எழுந்து, மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி, கடும் விமர்சனங்களுக்கும் எழுந்துள்ளன. 

பாஜக அரசு கையில் எடுக்கும் பல திட்டங்களும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதை கடந்த காலம் முதல் இந்தியாவே பார்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் செய்ய பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருவதும், தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

அதாவது, “ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் கடந்த 1954 ஆம் ஆண்டு” உருவாக்கப்பட்டது. 

அதன்படி, மாநில அரசு பணகளின் கீழ் பணியாற்றும் இந்த துறை அதிகாரிகளை, மத்திய அரசுப் பணிகளுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்தால் மாநில அரசின் ஒப்புதலோடு அதைச் செய்து கொள்ளலாம் என்று, இந்திய ஆட்சிப் பணி 1954 விதி 6 ன் கீழ் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இப்படியன நடைமுறையே, தற்போது வரை இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், மாநில அரசின் அனுமதியோ அல்லது ஒப்புதலோ இல்லாமலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் விதி எண் 6 ல் திருத்தம் செய்யும் வரைவு விதிகளை, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கடந்த டிசம்பர் மாதம் புதிதாக தயாரித்து உள்ளது. 

இப்படி, பழைய விதிகளை மாற்றும் இந்த புதிய விதிகள் தொடர்பாக வரும் 25 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 

ஆனால், மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களும் மிக கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளன.

மேலும், “மத்திய அரசின் இந்த புதிய திருத்தம், ஒவ்வொரு மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது என்றும், இதனால் நேர்மையாக பணியாற்றும் ஒவ்வொரு அதிகாரிகளும் அச்சத்துடன் பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்” என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதுடன், மத்திய அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புக் குரலும் எழுந்து உள்ளது.

குறிப்பாக, மத்திய அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஐஏஎஸ் விதிகளைத் திருத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்” என்றும், பாஜக அரசை மிக கடுமையாக எச்சரித்து உள்ளார்.

எனினும், இந்த புதிய விதி முறை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டு உள்ள விளக்கத்தில், “மத்திய அரசு பணிக்கு அனுப்பப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டு 309 ஆக இருந்தது என்றும், ஆனால் தற்போது 223 ஆக குறைந்து உள்ளது என்ம், இப்படியாக 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்து உள்ளது” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இப்படி, மாநில அரசுகள் போதிய எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பாத காரணத்தால், மத்திய பணியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்து உள்ளது என்றும், அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன” என்றும், விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

இது தொடர்பாக கருத்து தெரிவிததுள்ள திமுக செய்தித்தொடர்பாளர் சிவ ஜெயராஜ், “மாநில அரசிடம் இருக்கக்கூடிய கொஞ்சம் அதிகாரங்களையும் பறித்துவிட்டால் மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசை மாற்றிவிட முடியும் என, அவர்கள் நினைக்கிறார்கள்” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், “மத்திய அரசின் முடிவால் நாட்டில் மிகப் பெரிய சீர்குலைவு ஏற்படும்” என்று, கடுமையாக எச்சரித்து உள்ளார்.