வாய் பேச முடியாத காதல் ஜோடியின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

“பொதுவாகவே, காதலுக்குக் கண் இல்லை என்பார்கள், ஆனால் இங்கே ஒரு காதல் ஜோடிக்கு வாய் இல்லை என்று தான்” சொல்லத் தோன்றுகிறது.

“இந்த சமூகத்தில் கை, கால், வாய் நன்றாக இருந்தாலே அவர்களது காதல் கை கூடுவது போராட்டமாகவே இருக்கும். ஆனால், இங்கே, பிறப்பால் வாய் பேச முடியாத நிலைமை, காது கேட்காத சூழல் இப்படி இயற்கையாகப் பல குறைகள் இருந்தாலும், அந்த குறைகளையெல்லாம் தாண்டி, மனதிற்குப் பிடித்திருந்தால் போதும் என்று முடிவு எடுத்துக் காதலிக்கத் தொடங்கி; அந்த காதலில் கூட அவர்களது பெற்றோர்கள் கருணை காட்டாததால், அவர்களது காதல் தோற்றுப் போவதை விரும்பாத அந்த ஜோடி புறாக்காள், தங்கள் உயிரை விட்டு தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்டு, இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடை  பெற்றுக்கொண்டார்கள்” என்பதே நிஜம்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஜக்கம் பேட்டா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான நந்திபதி அஸ்வினி என்ற இளம் பெண்ணும், அங்குள்ள குண்டூர் மாவட்டம் சீனிவாசரவ் பெட்டாவைச் சேர்ந்த 27 வயதான ஷேக் மஸ்தன்வாலி என்ற இளைஞரும், ஐதராபாத்தின் கச்சிபவுலியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தனர்.

அப்போது, வாய் பேச முடியாத அஸ்வினிக்கும், வாய் பேச முடியாத ஷேக் ஆகிய இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகத் தொடங்கிய நிலையில், இந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலை வளர்த்து விட்டது. இதனால், அவர்கள் இருவருக்குள்ளும் காதல் பூ பூத்துக் குலுங்கியது.

அந்த காதலைக் கூட, அவர்கள் இருவரும் தங்களுக்கே உண்டான ஊமை பாசையில் தான் பரிமாறிக்கொண்டனர். அதன் படி, தங்களது காதலையும் அவர்கள் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தங்களது வீட்டில், காதல் விசயத்தைக் கூறி உள்ளனர்.

அப்போது, இளம் பெண் அஸ்வினியின் தாயார் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். அதாவது, ஷேக் மஸ்தான்வாலி ஏற்கனவே திருமணமானவர் என்பதால், அஸ்வினியின் தாயார் இந்த காதலுக்குக் குறுக்கே நின்று உள்ளார். 

இதனால், காதலர்கள் இருவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதன் காரணமாக, இருவரும் தற்கொலை செய்துகொண்டு சாவிலாவது இணை சேரலாம் என்று முடிவு செய்தனர்.

அவர்கள் திட்டமிட்ட படியே, கடந்த 7 ஆம் தேதி அஸ்வினி - ஷேக் மஸ்தான்வாலி ஆகிய இருவரும் அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் உள்ள பாலம் கிராமம் அருகே நின்று, ஒரு வீடியோவில் தங்களுக்கே உண்டான ஊமை பாசை பேசுகிறார்கள். அதில், “எங்களது காதலுக்கு எங்கள் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால், நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம். ஆனால், இதைப் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. சாவிலாவது நாங்கள் ஒன்று சேர்கிறோம்” என்றும், அந்த பெண் ஊமை பாசையில் பேசியிருக்கிறார். இதனையடுத்து, வாய் பேச முடியாத காதலர்கள் இருவரும் தங்களுக்கு தாங்களே உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். 

இதில், தீ பற்றி எரிந்த நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், இறந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இருவரிடமிருந்து போலீசார் கைப்பற்றிய அடையாள அட்டையின் மூலம், அவர்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். 

அத்துடன், தற்கொலை செய்துகொள்ளும் முன்பு இளம் பெண் அஸ்வினி தனது நண்பர்களுக்கு வீடியோ மூலம் பேசி அனுப்பியதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, வாய் பேச முடியாத காதல் ஜோடியின் தற்கொலை சம்பவம், அந்ந மாநில மக்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.