பெங்களூரு அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், கர்ப்பிணி மனைவியை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெங்களூரு அடுத்துள்ள பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி டவுன் ரங்கநாத் நகரைச் சேர்ந்த சந்தீப் பனபட்டி, கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த 24 வயதான மஞ்சுளா, என்ற பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த தம்பதிக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், மஞ்சுளா தற்போது கரு உற்று இருந்துள்ளார். இந்த நிலையில், சந்தீப் நாள் தோறும் குடித்துவிட்டு வீடு திரும்பும் அவர், வீட்டில் இருக்கும் மஞ்சுளாவிடம் தகராறு செய்து கடுமையாகத் தொந்தரவு செய்து வந்துள்ளார். 

அத்துடன், மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் சந்தீப், மனைவியை தினமும் அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், எப்போதும் போல், நேற்று காலையும் வழக்கம் போல் கணவன் - மனைவி இடையே சண்டை வந்துள்ளது. அப்போது, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவி மஞ்சுளாவிடம், சந்தீப் மீண்டும் தகராறு செய்துள்ளார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென்று கடும் ஆத்திரம் அடைந்த சந்தீப், அங்குக் கிடந்த கல்லை எடுத்து மனைவி மஞ்சுளாவின் தலையில் பலமாகத் தாக்கி உள்ளார். 

இதில், மஞ்சுளா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். சற்று நேரத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்ததால், கடும் அதிர்ச்சி அடைந்த சந்தீப், மனைவியின் உடலைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார். 

சந்தீப்பின் அழுகை சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உள்ளே வந்து பார்த்தபோது, அங்கு அவரின் மனைவி உயிரிழந்தது அனைவருக்கும் தெரிய வந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் விரைந்து வந்தனர். ஆனால், போலீசார் வருவதற்குள் மனைவியை கொலை செய்த குற்றப் பயத்திலேயே கணவன் சந்தீப் வீட்டிலேயே தூக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து, போலீசார் அங்கு வந்து பார்த்த போது, சந்தீப் தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாகக் கணவன் - மனைவி ஆகிய இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, கர்ப்பிணி மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை அடித்துக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பாகல் கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.