உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாரையும் ஊர்மக்களையும் சந்திக்க பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி வருபவர்கள் மீது தடியடி போன்ற அடக்குமுறைகளை அம்மாநில போலீஸார் கையாண்டுவருகின்றனர்.

சம்பவம் நடந்த கிராமத்துக்குள் நுழைவதற்கான இரண்டு வழிகளிலும் தடுப்புச் சுவர்களை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். `கிராமத்துக்குள் நுழைய யார் முற்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீஸார் எச்சரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தடை இருந்தபோதிலும், சம்பந்தப்பட்டவர்கள் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ஹத்ராஸ் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி, டெரக் ஓ பிரையன் ஆகியோரை போலீசார் கீழே தள்ளியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டும், அவரின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கக் கேட்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலர் ஒன்று கூடி நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று மாலை முதலே போராட்டக்காரர்கள் களத்துக்கு வந்து உபி அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இந்தியா கேட் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டதால், அங்கு நடத்தத் திட்டமிட்டிருந்த போராட்டம் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கியது. இந்தியா கேட் செல்ல முற்பட்ட போராட்டக்காரர்களை பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பீம் ஆர்மி தலைவர் பேசுகையில், “ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். உபி முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்திய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “நாட்டின் மகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நடந்தவை எல்லாம் மிக வேதனைக்குரியது. இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடந்த போதும், வன்கொடுமை நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவர்கள் விரும்பும் நபரிடம் பேச அனுமதிக்க வேண்டும். அவர்களைப் பூட்டி வைக்கக் கூடாது. இதில் எந்த அரசியலும் இருக்க கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் வேறு எங்கும் நடக்க கூடாது” என்று வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் பாஜகவின் மவுனத்தைக் கண்டித்துள்ள சீதாராம் யெச்சூரி, “மத்திய அரசின் அமைதி, ஹத்ராஸ் சம்பவம் குறித்து பாஜகவின் உயர் அதிகாரிகள் மற்றும் உபி அரசாங்கத்தின் பதில் ஆகியவை கட்சியின் சர்வாதிகார முகத்தைக் காட்டுகிறது” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் கூறுகையில், “ரவுடிகளும், காவல்துறையினரும் ஹத்ராஸை சுற்றி வளைத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களையும் ஊடகவியலாளர்களையும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை, இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் குரல்கள் ஒடுக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.

உபியில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் ஸ்வாரா பாஸ்கர், குற்றத்தைத் தடுக்கத் தவறியதற்காகவும், குடும்பத்தினரை கடைசி சடங்குகளைச் செய்ய விடாததற்காகவும் உபி அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

குஜராத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி, “நடந்தவற்றை மறைக்கப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து வலுக்கட்டாயமாகக் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. எனவேதான், ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் அக்குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஹத்ராஸ் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக டெல்லியில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், அகில இந்திய மாணவர் சங்க செயலாளர் (டெல்லி) பிரசென்ஜீத் குமார், “உபி குற்றவாளிகளுக்கும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் மாநிலமாக மாறியுள்ளது. உன்னாவ் சம்பவத்தில் குல்தீப் செங்கார் பாதுகாக்கப்பட்டார். அதுபோன்று மீண்டும் நடக்கிறது. 100 சதவிகிதம் தண்டனை பெற்று தராமல் இதுபோன்ற வன்கொடுமைகளை நிறுத்த முடியாது. எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
 
இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் டெல்லி, நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லி, மகாராஷி வால்மீகி கோயிலில், ஹத்ராஸ் சம்பவத்தில் பலியான பெண்ணுக்காக நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். உபி அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்துள்ள நிலையில், ஹத்ராஸ் விவகாரத்தில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து உபி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிஏஏவுக்கு எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம் என பல போராட்டங்கள் நடந்த ஜந்தர் மந்தரில், கொரோனா பரவல் காரணமாக யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இந்த சூழலில் ஹத்ராஸ் சம்பவத்தால் மீண்டும் போராட்ட பூமியாக மாறியுள்ளது ஜந்தர் மந்தர்.