இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநில மக்கள் பலரும் வணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல, இந்தியாவின் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகையானது மிகவும் விசேசமாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

அதாவது, வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக, வட இந்தியாவில் இந்து மதத்தினர் கொண்டாடும் பண்டிகையாக ஹோலி பண்டிகை இருந்து வருகிறது. 

அதன் படி, வண்ணங்களால் கொண்டாடப்படும் திருவிழாவான ஹோலி பண்டிகை அன்று பொது மக்கள் தங்களது “துன்பங்கள் தொலைந்து, மகிழ்ச்சிகரமானதாக வாழ்க்கை மாறும்” என்று, மக்கள் நம்புகிறார்கள். இதுவே, இந்த ஹோலி பண்டிகையின் தாற்பரியமாகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகையானது இன்றைய தினம் வட இந்திய மாநிலங்களிலும், தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழும் வட இந்திய மக்களாலும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, ஹோலி பண்டிகையான இன்றைய தினம் மக்கள் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் வண்ணப் பொடிகளை தூவி, ஒருவருக்கு ஒருவர் “ஹோலி வாழ்த்துகளையும்” தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டு, தங்களது அன்பையும் பரஸ்பரமாக பரிமாறிக்கொண்டு வருகின்றனர். 

அத்துடன், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும்  உற்சாகமாக இந்த ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசி, ஹோலி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரையில், வட இந்தியர்கள் அதிகமாக வாழும் சௌகரிப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி பண்டிகை களைக்கட்டி உள்ளது. 

குறிப்பாக, “வாழ்வில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு வண்ணங்களை கொண்டு வரட்டும்” என்று, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து பிரதமர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பரஸ்பர அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் ஆக உள்ள இந்த வண்ணங்களின் திருவிழா, உங்களுடைய வாழ்விலும் மகிழ்ச்சியின் ஒவ்வொரு வண்ணங்களை கொண்டு வரட்டும்” என்று, பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அதே போல், இந்தியாவைப் போன்றே, அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இன்றைய தினம் இந்த ஹோலி பண்டிகையானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.