காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து எழுச்சி முன்னணியினர் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனியில் தான், இந்து எழுச்சி முன்னணியினர் இப்படி எதிர்ப்பு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

உலகம் முழுமைக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதியான நேற்றைய தினம் “காதலர் தினம்” கொண்டாடப்பட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் கலாச்சார சீரழிவு என்று கூறி, பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து இந்தத் தினத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படியான “காதலர் தினம்” எதிர்ப்பு நிகழ்வுகள் பல கடந்த காலங்களில் இந்தியாவில் தொடர்ச்சியாகவும், பரவலாகவும் அரங்கேறின.

அந்த வகையில், தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில், காதலர் தின எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாகக் கழுதைகளுக்கு ஆரம் மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சிவன் கோயில் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து, காதலர் தினத்தைக் கண்டித்து எழுச்சி இந்து முன்னணி அமைப்பினர், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, காதலர் தின வாழ்த்து மடல்களைக் கழுதைக்கு உணவாக அளித்து அவர்கள் மிகவும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், வாழ்த்து மடல்களைத் தீயிட்டு எரித்து காதலர் தினத்திற்கு எதிரான தங்களது கடும் எதிர்ப்பையும் அவர்கள் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் பேசிய இந்து எழுச்சி முன்னணி நிறுவனத் தலைவர் ரவி, “நம் நாட்டிற்கு அன்பும், காதலும் தேவைப்படுகிறது” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “உண்மையான காதலை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும், மாறாகக் காதல் என்ற போர்வையில் நடைபெறும் கலாச்சார சீரழிவு மற்றும் பெற்றோரின் கனவுகளை அழிக்கும் செயலில் ஈடுபடுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்” என்றும், கூறினார்.

“இன்றைய தினத்தில் கோவை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு பொது மக்கள் மற்றும் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும்” அவர் தெரிவித்தார். 

இதனையடுத்து, அந்த இந்து அமைப்பினர் கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தனர். 

இதனிடையே, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து எழுச்சி முன்னணியினர் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலைல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.