11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வகுப்பு ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

பீகார் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

பீகார் மாநிலம் புல்வாரி ஷரீப் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிக்கூடம் ஒன்றில், 100 க்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். 

அந்த பள்ளியில், 11 வயதான 5 ஆம் வகுப்பு சிறுமி ஒருவரும் படித்து வந்தார். அந்த மாணவிக்கு சமீபத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனால், பயந்துபோன சிறுமியின் பெற்றோர், அந்த மாணவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அந்த மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், “இந்த 11 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக” கூறி உள்ளனர். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்கேயே அழுது துடித்தனர். இதனையடுத்து, அந்த சிறுமியிடம் மருத்துவர்களும், சிறுமியின் பெற்றோரும் சேர்ந்து விசாரித்து உள்ளனர். 

அப்போது, அந்த 11 வயது சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவம் பற்றிக் கூறினார். 

“பள்ளிக்கூடத்தில், பள்ளியின் தலைமையாசிரியரும், தனது வகுப்பு ஆசிரியரும் சேர்ந்து என்னை பாலியல் பலாத்கார செய்துவிட்டனர்” என்று, அழுதுகொண்டே அந்த அப்பாவி சிறுமி கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரு ஆசிரியர்களிடமும் போலீசார் தங்களது பாணியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ஆசிரியர்கள் இருவரும் தங்களிடம் படித்த 11 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் அங்குள்ள பாட்னா சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் முன்னிறுத்தினர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவதேஷ் குமார், இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதன் படி, “மாணவி பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளியான, பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். கூடவே, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்தார்.

அதே போல், இந்த குற்றத்திற்கு முழுவதும் உடந்தையாக இருந்த வகுப்பு ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கும், இந்த வழக்கின் தீர்ப்பும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.