உத்திரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கூட்டம் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த வழக்கை விரைந்து நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அம்மாநில உள்துறைச் செயலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில், அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். அதே நேரத்தில், அந்த சிறுமியின் கிராமத்திற்குச் செல்ல ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அந்த மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். இந்த மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், செல்லக் கூடாது என்று அவர்கள் சென்ற வாகனங்களை போலீசார் வழி மறித்தனர். இதனைச் சற்றும் எதிர்பாராத ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும், நடந்து சென்றனர். 

அப்போது, உத்தரப் பிரதேசம் எல்லை கிரேடர் நொய்டா பகுதியில் போலீசார் ராகுல் காந்தியை வழி மறித்தபோது, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து ராகலை போலீசார் கையால் தள்ளி உள்ளனர். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ராகுல் காந்தி, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அந்த இடத்தில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. அந்த தருணத்தில் ராகுல் பின்னாடியே வந்துகொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து அந்த இடத்தில் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் மீது உத்தரப் பிரதேச போலீசார் தடியடி நடத்தினர். 

அப்போது, ராகுல் காந்தியையும் போலீசார் லத்தியால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் பதற்றமும் பரபரப்பும் சுற்றிக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் அவர் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து, நேற்று முன் தினம் 3 ஆம் தேதி மீண்டும் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். அப்போது, அந்த பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் 
போடப்பட்டிருந்தன. அத்துடன், ராகுல் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், அனைவரையும் அனுமதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக நேற்றைய தினம் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்விர் சிங் பெகலவனின் வீட்டில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நட்டதுள்ளது. 

குறிப்பாக, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று உள்ளது. இதில், பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும், குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்விர் சிங் பெகலவனின் மகன் மன்வீர் சிங், “இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால், இளம் பெண்ணின் குடும்பத்தினர் அடிக்கடி தங்கள் நிலையை மாற்று மாற்றிப் பேசுகிறார்கள். 
மாநில அரசைக் குற்றம் சாட்டுவதற்காகவே ஒட்டு மொத்த சம்பவமும் உருவாக்கப்பட்டு உள்ளது போல், அவர்கள் பேசுகிறார்கள். இந்த விவகாரத்தில், முதன் முதலில் புகார் அளித்தவர்கள் இளம் பெண்ணின் குடும்பத்தினர் மீது தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை” என்றும், வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

மேலும், “இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் அவரவர் வீட்டில் இருந்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் குற்றம் செய்திருந்தால் எப்படி வீட்டிலேயே அவர்கள் 4 பேரும் இருப்பார்கள்?” என்றும், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்விர் சிங் பெகலவனின் மகன் மன்வீர் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, உத்தரப் பிரதேச கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆளும் பாஜகவினரும் குற்றவாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து உள்ளதால், மக்கள் அனைவரும் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். இதனால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில், அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.