கொரோனா 3 வது அலை இந்தியாவை தாக்கும் பொழுது, அதிலிருந்து பாதுகாப்பது எப்படி என்கிற கேள்வி பொதுமக்களிடையே எழுந்து உள்ளது. 

கொரோனா என்னும் கொடிய வைரஸ், உலகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம், முதல் அலையைக் காட்டிலும், 2 வது அலையில் தான் உயிர் பலி எண்ணிக்கையும், அதன் பாதிப்பும் மிகப் பெரிய அளவில் இருந்தது. இதனால், கொரோனாவின் இந்த 2 வது அலையில் சிக்கிய அப்பாவி பொது மக்கள் எல்லாம் உயிர் பயத்தில் அஞ்சி நடுங்கிப்போனார்கள்.

அத்துடன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட முழு நேர ஊரடங்கால், 2 வது அலையின் பாதிப்பு சற்று ஓரளவு கட்டுக்குள்  கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தினசரி கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது, தற்போது சற்று கணிசமாகக் குறையத் தொடங்கி இருக்கிறது. 

இது ஒரு பக்கம் இருந்தாலும், “இந்தியாவில் கொரோனா 3 வது அலை உருவாகுமா?” என்கிற கேள்வி பொது மக்கள் மத்தியில் தற்போது எழுந்து உள்ளது.

அதன் படி, “இங்கிலாந்து, காங்கோ உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தற்போது 3 ஆம் அலையாகப் பரவிக்கொண்டு இருப்பதாக” அதன் தாக்கம் பெரிய அளவில் இருப்பதாகவும் செய்திகள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன. 

இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில் தான், இந்தியாவில் கொரோனாவின் 3 வது அலை ஏற்பட்டால், அதன் தாக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சில செய்திகள் வெளியானது. இந்த செய்தி, இந்தியாவில் பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும், “கொரோனாவின் 3 வது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என எந்த ஆதாரமும் இல்லை” என, கொரோனா தடுப்பு நிர்வாகக் குழுவின் உறுப்பினர் வி.கே.பால் தற்போது கூறியுள்ளார். 

அத்துடன், “கொரோனாவின் 3 வது அலையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பெற்றோர் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “இந்தியாவில், தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெருமளவு தடுப்பூசி போடாத காரணத்தால், கொரோனாவின் 3 ஆம் அலைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக” ஐசிஎம்ஆர் விஞ்ஞானி கணேஷ் குமார், தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், “பொதுவான ஊரடங்கால் தான், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல், கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு பரவும் தன்மை மிக அதிகம் உள்ளதாகவும்” மருத்துவர்கள் தற்போது புதிய எச்சரிக்கை ஒன்றைக் கூறியுள்ளனர்.

முக்கியமாக, “இந்தியாவில், தடுப்பூசி போடுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவையே, கொரோனாவை தடுக்கும் ஆயுதம்” என்றும், பெரும்பாலான மருத்துவர்களின் கூறும் ஒற்றை அறிவுரையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.