லடாக் எல்லை விவகாரத்தில் பாதுகாப்பு தொடர்பான பார்லிமென்ட் குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கலந்து கொண்டார். மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக பதவியேற்ற பிறகு, அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில், ராகுல்காந்தி முதன்முறையாக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் எம்.பி.,க்களிடம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறும்போது,

``எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தற்போதைய நிலையை மாற்ற சீனா செய்யும் எந்த முயற்சிகளையும் முறியடிக்க முப்படைகளும் தயாராக உள்ளன. எல்லையில், சீன படைகள் தவறாக எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையில் உஷாராக உள்ளன"

என்றார் அவர்.

இந்நிலையில் இன்றைய தினம் சீன படைகளின் அத்துமீறல் காரணமாக இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் நீடிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் அம்சங்கள், பட்டியலிடப்படும் மசோதாக்கள் உள்ளிட்ட அவை நடவடிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, எல்லையில் சீனா அத்துமீறல் தொடர்பான பிரச்சனையும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எனவே, சீனா அத்துமீறல், இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ராணுவ நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும். கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பாராளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம், தனிநபர் மசோதாவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், சீன பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த போது, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் பேசியபோது, ``இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் நமக்கு உள்ள உறுதியில், எந்த சந்தேகமும் இல்லை. தூதரகம் மற்றும் ராணுவ ரீதியில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதுடன், எல்லையில், முற்றிலுமாக படைகளை வாபஸ் பெறுவதுடன் மற்றும் பதற்றத்தை தணித்து முழுமையான அமைதியை கொண்டு வர வேண்டும். இந்திய சீன எல்லையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளும் நடவடிக்கை எடுப்பதுடன், கருத்து வேறுபாடுகள், பிரச்னையாக உருவெடுப்பதை இரு நாடுகளும் அனுமதிக்கக்கூடாது. எல்லையில் தற்போதைய சூழலை முறையாக கையாள வேண்டும். எல்லை பிரச்னை இன்னும் பெரிதாகவோ, சிக்கலாகும் வகையிலோ மாற்றக்கூடாது. இருதரப்பு ஒப்பந்தப்படி,எல்லையில் பாங்காங் ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் படைகளை விரைவாக திரும்ப பெறுவதில், இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்ற வேண்டும்" என்றார் அவர்.