ஆபாச வீடியோ அனுப்பியதால் “பலான” சிக்கலில் கோவா துணை முதலமைச்சர் சிக்கி உள்ளது புதிய சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கோவாவின் துணை முதலமைச்சராக பாஜக வின் மூத்த தலைவரான சந்த்ரகாந்த் காவ்லேக்கரி இருந்து வருகிறார்.

ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு அங்கு வெற்றி பெற்றவர் இவர். எனினும், பாஜகவில் 10 பேருடன் ஒருவராக இணைந்து அங்கு பாஜக ஆட்சியமைக்க மூலகாரணமாக இருந்தவர் தான் இந்த சந்த்ரகாந்த் காவ்லேக்கரி. இதற்காக, அவருக்குத் துணை முதல்வர் பொறுப்பு கொடுத்து பாஜக அவரை அழகு பார்த்து வருகிறது. 

இதனால், கோவாவின் பரபரப்பான அரசியலுக்கு காரண கர்த்தாவாக அமைந்து போனார் சந்த்ரகாந்த் காவ்லேக்கரி. அதே நேரத்தில் இவர் மீதான விமர்சனங்களுக்கு அங்கு பஞ்சமில்லை. 

இந்நிலையில், இவர் நேற்று இரவு நேரத்தில் அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இவரது செல்போன் எண்ணிலிருந்து "VILLAGES OF GOA" என்ற வாட்ஸ்ஆப் குரூப்பில் ஆபாச வீடியோ ஒன்று ஷேர் ஆகி உள்ளது. அப்போது நள்ளிரவு நேரம் 1.20 மணி ஆகும். 

ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சரே ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் ஆபாச வீடியோ ஒன்று ஷேர் செய்தது, அந்த மாநிலம் முழுவதும் வைரலானது. இந்த விசயம் அங்கு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இந்த விகாரத்தில், கோவா முன்னணி கட்சியின் மகளிர் பிரிவினர், அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் துணை முதலமைச்சர் மீது புகார் அளித்து உள்ளனர். அந்த புகாரின் பேரில் துணை முதலமைச்சர் சந்த்ரகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை அங்கு பூதாகாரமாக வெடித்து உள்ளது.

இதனால், கவலையடைந்து உள்ள துணை முதலமைச்சர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் இது தொடர்பாக கோவா சைபர் பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், “ எனது செல்போனில் இருந்து ஆபாச வீடியோ அனுப்பப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஹேக்கர்கள் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். 

குறிப்பாக, “அந்த ஆபாச வீடியோ ஷேர் ஆன நேரத்தில் நான் செல்போனை பயன்படுத்தவே இல்லை என்றும், அந்த சமயத்தில் நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்” என்றேன் அவர் தெரிவித்து உள்ளார். 

மேலும், “ஆபாச வீடியோ ஷேர் ஆன அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் நானும் ஒரு உறுப்பினர்” என்பதை அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

அத்துடன், “என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ இப்படி செயல்பட்டு உள்ளனர் என்றும், அவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்றும், அந்த புகாரில் அவர் தெரிவித்து உள்ளார். 

எனினும், இந்த செயலுக்காக, துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் “இது ஹேக்கர்களின் வேலை” என்று, விளக்கம் அளித்தாலும், சைபர் பிரிவில் புகாரே தந்தாலும், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை லேசில் விடுவதாக இல்லை. இதன் காரணமாக, கோவை துணை முதலமைச்சர் சந்த்ரகாந்த்துக்கு சிக்கல் மேல் சிக்கல் தற்போது ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.