ஆன்லைனில் புது மோசடியாக, பெண் வேஷம் போட்ட ஆண் ஒருவர், பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து 50 ஆயிரத்திற்கு விற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான், ஆன்லைன் மூலமாக இப்படி ஒரு பலான வேலை நடந்திருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 16 வயதான அந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது, கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த மாணவி தனது வீட்டில் இருந்த படியே, ஆன்லைனில் படித்து வந்தார். பள்ளி பாடம் படித்து வந்த நேரம் போக, மற்ற நேரங்களில் அவர் எந்நேரமும் ஆன்லைனில் மூழ்கியே இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, சமூக வலைத்தளங்களில், “வெளிகே” என்கிற ஆப் மூலமாக அந்த பகுதியைச் சேர்ந்த “ராஜீவ் கார்க்” என்ற இளைஞனோடு அறிமுகம் ஆகி உள்ளார். 
ஆனால், “ராஜீவ் கார்க்” என்ற இளைஞனோ, தன்னை ஒரு பெண் என்று அறிமுகம் செய்துகொண்டு, பெண் வேடமிட்ட தனது போட்டோவைவும் ஆன்லைனில் DP - யாக வைத்து அந்த பள்ளி மாணவியை ஏமாற்றியிருக்கிறார்.

இதனால், அந்த பள்ளி மாணவியும், “நாம் ஒரு பெண்ணோடு தான் பழகுகிறோம்” என்று நினைத்து, அவருடன் தினமும் ஆன்லைனில் அரட்டை அடித்து வந்திருக்கிறார். இப்படியாக, இருவரும் அடிக்கடி ஆன்லைனில் பேசி அரட்டை அடித்து வந்த நிலையில், பெண் வேடத்தில் பழகி வந்த “ராஜீவ் கார்க்” அந்த பள்ளி மாணவியை தனியாகச் சந்திக்க அழைத்திருக்கிறார். 

இதனையடுத்து, “பெண் தோழி தானே” என்று நினைத்து, அவரை சந்திக்க வீட்டை விட்டு கிளம்பி, அவர் சொன்ன குறிப்பிட்ட இடத்திற்கு அந்த பள்ளி மாணவி வந்திருக்கிறார்.

அப்போது, பெண் வேடமிட்ட “ராஜீவ் கார்க்” அந்த பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு காரில் கடத்திச் சென்று உள்ளார்.
 
இதனையடுத்து, அந்த 16 வயது பள்ளி மாணவியை ராஜீவ் கார்க் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். தனது பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, அந்த பெண்ணை விடுவிக்காமல், பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த சிறுமியை ராம் மோகன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று உள்ளார்.

இந்த பள்ளி மாணவியை பணம் கொடுத்த வாங்கிய ராம் மோகன், அந்த சிறுமியை தொடர்ச்சியாக 2 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 

அதே நேரத்தில், சிறுமியை காணவில்லை என்று, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாகத் தேடி வந்தனர். 

அத்துடன், அந்த பெண் பயன்படுத்தி வந்த செல்போன் நம்பரை ஆய்வு செய்த போது, அந்த நம்பர் டெல்லியில் உள்ள ஒரு இடத்தை காட்டியிருக்கிறது. 

இதனையடுத்து, உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த அந்த பள்ளி மாணவியை மீட்டு, விசாரணை செய்து, சிறுமிக்கு நடந்த கொடுமைகளைத் தெரிந்துகொண்டு, இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்து உள்ளனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.