தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞன் ஒருவன் சிங்கத்தின் அருகில் சென்று, அதனைச் சீண்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நேரு உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆப்பிரிக்க சிங்கம் ஒன்றும் இருக்கிறது.

இந்த பகுதிக்குள் தனக்கென்று அமைக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு பகுதியில் அந்த சிங்கம் சுற்றித் திரிந்துகொண்டு இருந்தது.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர், நேற்று மாலை நேரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியைத் தாண்டி, சிங்கம் இருக்கும் அதன் குகையின் மேல் பகுதிக்கு வந்திருக்கிறார்.

அப்போது, அந்த இளைஞனை பார்த்த சிங்கம், அவரை தாக்க முற்பட்டு கோபத்துடன் கர்ஜித்திருக்கிறது. அத்துடன், அந்த நபர் அந்த குகையின் மேலே சற்று உயரத்தில் இருந்த காரணத்தால், அந்த சிங்கமானது தனக்கு உணவு கிடைத்துவிட்டதாக எண்ணி, இங்கும் அங்குமாக சென்று மேலே தாவுவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தது.

அதே நேரத்தில் இந்த சம்பவங்கள் எல்லாம், அங்குள்ள கேமராவில் பதிவாகி இருக்கிறது. 

அந்த வீடியோவில் அந்த நபர் ஒரு பாறையில் குனிந்து நின்று, சிங்கத்தை சீண்டிப் பார்க்கிறார். 

அப்போது, அந்த தடை செய்யப்பட்ட பகுதியின் வெளியே நின்றிருந்த பார்வையாளர்கள், அந்த நபரை பார்த்து வெளியே வரும்படி சத்தம் போட்டுக் கூச்சலிடுகின்றனர். மேலும், சிலர், கவனமாக இருக்கச் சொல்லியும், இன்னும் சிலர் அங்கு உதவிக்கு ஆட்களை அழைப்பதுமாகச் சத்தம் போடுகிறார்கள். 

இதனையடுத்து, அங்கு உடனடியாக விரைந்து வந்த பூங்கா ஊழியர்கள் இருவர், சம்மந்தப்பட்ட அந்த 31 வயது இளைஞனை மீட்டு, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

மேலும், அந்த இளைஞரை காவல் துறையினரிடம் ஒப்படைத்த பூங்கா ஊழியர்கள், “அந்த நபர்  சிங்கத்தை தொந்தரவு செய்ததாக” அவர் மீது புகார் அளித்தனர். 

இதனையடுத்து, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “அவரின் பெயர் ஜிசாய் குமார்” என்பது தெரிய வந்தது. அத்துடன், போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இது குறித்து நேரு விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜி சாய் குமார், பார்வையாளர்களுக்குத் தடை செய்யப்பட்ட சிங்கம் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து, பாறாங்கற்களுக்கு மேல் நடந்து சென்றார் என்றும், அந்த நபரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் மீட்டு பகதூர்புரா காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.