பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான லலன் குமார் சஃபி என்ற இளைஞர், சலவைத்  தொழிலாளரான பணியாற்றி வருகிறார். 

இந்த இளைஞர், கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவரை மானபங்கப் படுத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரிடமிருந்து எப்படியோ போராடி விடுபட்டு உள்ளார்.

அத்துடன், தனக்கு நேர்ந்த இந்த பாலியல் அத்து மீறல் சம்பவம் குறித்து அங்குள்ள லாகஹா காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பின்னர், இந்த வழக்கில் ஜாமீன் கோரி, அவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நிதிபதி அவினாஷ் குமார், குற்றவாளிக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நீதிபதி அளித்த நிபந்தனைகள் என்னவென்றால், “குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேலைகளையும் இலவசமாக அடுத்த 6 மாதத்துக்கு சலவை செய்ய வேண்டும்” என்று, உத்தரவிட்டிருக்கிறார். 

மேலும், “பெண்களின் துணையைத் துவைத்து அதை அயர்ன் செய்து ஒவ்வொரு வீட்டிலும் சென்று அவர் கொடுக்க வேண்டும் என்றும், இதைக் கண்காணித்து ஊர் பஞ்சாயத்துத் தலைவர், நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்பிக்க வேண்டும்” என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நீதிமன்றம் வழங்கிய இந்த வித்தியாசமான தீர்ப்பு அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தீர்ப்பு பற்றிய செய்திகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த நிதிஷ்குமார் என்பவருக்கு, ஜாமீன் வழங்கிய இதே நீதிபதி, “5 ஏழை குழந்தைகளின் கல்விக்கு 3 மாதம் பணம் செலுத்த வேண்டும்” என்றும், அதிரடியாக உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.