இந்தியா என்பது ஒரு விவசாய நாடு என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை. இந்தியாவின் வரைப்படங்களில் பார்த்தால் நதிகளாலும், வனங்களாலும் , பசுமை நிறைந்து காட்சியளிக்கிறது. ஆனால், நிஜத்தில் இவை அனைத்தும் கானல் நீராகத்தான் இருக்கிறது.

தண்ணீரை விலைக்கொடுத்து வாங்கிய குவைத் முன்னேறிவிட்டது, தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் முன்னேறிவிட்டது, கடிகாரத்தை நம்பி காலம் தள்ளக்கூடிய சுவிஸ் முன்னேறிவிட்டது, அறிவியலை ஆதாரமாக வைத்திருக்கும் அமெரிக்கா முன்னேறிவிட்டது, 2500மைல் கடல் எல்லை, 2500 மைல் மலை எல்லை, கிழக்கு மேற்காக 2000 மைல், தெற்கு வடக்காக 2000மைல், உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.2 சதவிகீதம் உடன் தீபகர்பதேசம் நமது இந்தியா இன்னும் முன்னேறவில்லை..

ஏன்?

 நாட்டின் முதுகெலும்பான விவசாயம் வளைந்து போயிருக்கிறது. இதுதான் காரணம்.

வளைந்திருந்தத விவசாயம்  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளான் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதுப்போல் இருக்கிறது. இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் லட்சக்கணக்கில் டெல்லியையும் டெல்லி எல்லையை சுற்றிலும் போராட்டத்தில் இறங்கினர்.

அதனைத்தொடர்ந்து பலமுறை மத்திய அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. எத்தனை முறை பேசினாலும், சட்டத்தைத் திரும்பப் பெறுவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. ஏன் நீதிமன்றமே மத்திய அரசிடம் கேட்டது , “ நீங்கள் திரும்பப்பெறுகிரீர்களா, அல்லது நாங்கள் தடை செய்யட்டுமா என்று?” அதற்கே… மவுனம் காத்தது மத்திய அரசு.  

போராட்டம் தொடர்ந்தது.. குடியரசு தினதன்று , 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்தனர். சொன்னார்கள்.. செய்தார்கள்.


இந்தியாவின் 72வது குடியரசுதினம். பிரதமர் உற்சாகமாக கொண்டாடினார். ஒருபக்கம் பிரதமர் கொடியேற்றுகிறார் மற்றொரு பக்கம் டிராக்டர் பேரணி, டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை மலர் தூவி வரவேற்றனர் மக்கள்.  ஆனால் ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசர்களோ அரியணையில் வீற்றிருந்து விவசாயிகள் பேரணியை வேடிக்கைப் பார்த்தனர்.

வேடிக்கை பார்த்தவர்கள் சிறிது நேரத்தில் வேட்டை ஆடவும் ஆரம்பித்தனர். தமிழில் ஒரு பழமொழி உண்டு “ உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கக்கூடாது” என்று, அதாவது ஒருவர் வீட்டில் ஒருபிடி சாப்பாடு சாப்பிட்டுவிட்டாலே அவர்களுக்கும் தீமை நினைக்கக்கூடாது என்று சொல்வார்கள், ஆனால் இன்று நம் நாட்டிற்கே , மனித இனத்திற்கே உணவளித்த விவசாயிகளின் குருதியை உறிஞ்ச தயாராகிவிட்டார்கள் கொடுங்கோல் ஆட்சியாளர்கள். 


விவசாயிகள் மீது கண்ணீர் குண்டும், லத்திகளும் பாய்ந்தன. ஒரு பக்கம் அடி உதை. ஆனால் இன்னொரு பக்கம் விவசாயிகள் வைராக்கியத்துடன் செங்கோட்டையை நோக்கி முன்னேறினர். செங்கோட்டையை அடைந்தனர். செங்கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடு ஏற்றியிருந்தக் கொடிக் கம்பத்தின் அருகில் விவசாய அமைப்பின் கால்சா கொடி ஏற்றப்பட்டது. அதிகாரிகளும் அரசும் திகைத்தது. உளவுத்துறை உறைந்தது. இவர்கள் எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்கள் அதிகாரிகள். 


உழவர்களிடம் உளவுத்துறையே தோற்றது. டெல்லி போர்க்களமாக மாறியது. மீண்டும் வரலாற்றில் ஒரு ஜாலியன் வாலா பாக் சம்பவம் அரங்கேறிவிடுமோ என்று நாடே அச்சப்பட்டது. அன்று ஜெனரல் டையர் இன்று பிரதமர் மோடி. யாருக்கான அரசு இது என்று மக்கள் கேள்விக் கனைகளால் துளைக்கிறார்கள்? இத்தனை லட்சம் மக்கள் போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது அரசின் கடமை தவறினால் அந்த சட்டத்தை ரத்து செய்தாக வேண்டும்.

யாரை திருப்தி படுத்த நினைக்கிறார்கள் ? இந்தியா விவசாய நாடா? கார்ப்பரேட் நாடா ? என்று சமூக வலைதளங்களில் வருத்தெடுக்கின்றார்கள் நெட்டிசன்கள். தலைநகர் டெல்லி ஸ்தம்பித்தது. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கனாட் பிலேஸ் மூடப்பட்டது. இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப்பார்க்க வைத்தது ராஜ பாதையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பல்ல, விவசாயிகள் ரத்தமும் சதையுமாக போராடியதைத்தான். விவசாயிகள்  டிராக்டர், குதிரைகள், கிரேன்களுடன், ஜெய் ஜவான், ஜெய் கிசான் கோஷம் எழுப்பி தேச பக்தி பாடல்களைப் பாடி அதற்கேற்றார்போல தாளம் இசைத்தப்படி பேரணியை நடத்தினார்கள். இந்த அமைதிப் பேரணியை போர்க்களமாக மாற்றியது யார்? 


எல்லைப் பகுதியில் இந்தாவியை மிரட்டிக் கொண்டிருக்கிறது சீன ராணுவம். அத்துமீறி தாக்குகிறார்கள், அடாவடித்தனம் செய்கிறார்கள். ஆனால் உள்துறை அமைச்சரோ அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்துகிறார், சமாதானப் புறாவை பறக்கவிடுகிறார். சீன ராணுவத்தை எதிர்கொள்ள பயன்படுத்த வேண்டிய ஆயுதத்தையும் , துணை ராணுவத்தினரையும் சொந்த மக்களாகிய, மண்ணில் விதை விதைக்கக்கூடிய உழவர்களை தாக்க பயன்படுத்துகிறார்கள். 


இந்த சம்பவங்களை பார்க்கும் மக்கள் , “ இருள் மண்டிய இதயங்களின் நாட்டாண்மைதான் நடைபெறுகிறது” என்பதை உணர்ந்திருக்கிறார்கள். நேற்று போராட்டக்களத்தில் ஒருவர் இறந்திருக்கிறார். அவருக்கு தேசியக்க்கொடியைப் போர்த்தி அடக்கம் செய்தனர் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாய வீரர்கள். 


விவசாயிகளுக்கு இதுவே சிறந்த குடியரசுதினம்! வரலாற்றின் பக்கங்களில் ஆட்சியாளர்களுக்கு இந்தக் குடியரசு தினம்தான் அழியாதக் கரையாக பதிந்துள்ளது. வயிற்றை நிரப்பிய விவசாயிகளின் போராட்டம் வெற்றியடையும், அவர்களின் கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம். 
- அஜெய் வேலு