டெல்லியில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் செய்து வரும் 11-ம் தேதி சொந்த ஊர்களுக்கு புறப்படும் விவசாயிகள்.

farmers protest

விவசாயிகளின் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளதால் போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து டெல்லியிலிருந்து கூடாரங்களை காலி செய்துவிட்டு வீடு திரும்பி வருகிறார்கள். கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் மீது போடப்பட்ட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகளை திரும்ப பெற மத்திய மாநில அரசுகள் ஒப்புக் கொண்டதை அடுத்து விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை கண்டித்து கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி டெல்லி எல்லையில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த லச்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராடினார்கள்.

அதனைத்தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறும் தெரிவித்தார். அதே போல் வேளாண் சட்டங்கள் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து போராட்டத்தின் போது விவசாயிகள் மீது புனையப்பட்ட வழக்குகள் இறந்த விவசாயிகளுக்கான இழப்பீடு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தனர். 

இந்நிலையில் விவசாய சங்கங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதன்படி அவர்களது கோரிக்கைகளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். எனினும் அந்த அறிக்கை இவர்களது கோரிக்கைகள் முழுமையாக இல்லை என்பதால் நேற்று போராட்டம் வாபஸ் பெறும் திட்டத்தை விவசாயிகள் கைவிட்டுவிட்டு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என அறிவித்தனர். வெறும் வெள்ளைத்தாளில் கையெழுத்து போட்ட கடிதத்தை வைத்து ஒன்று செய்ய முடியாது. அரசு லெட்டர் பேடில் எழுதி கையெழுத்திட்டால் மட்டும் அது முக்கியத்துவம் பெறும் என விவசாய சங்கங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் மீது போடப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்தது.

அதனைத்தொடர்ந்து  அவர்கள் கேட்டபடி அரசு லெட்டர் பேடில் கடிதமானது இன்றைய தினம் விவசாய சங்கங்களுக்கு இன்று கொடுக்கப்படும். இதை வைத்து இன்றைய தினம் பிற்பகல் 12 மணிக்கு விவசாய சங்கங்கள் சிங்கு எல்லையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. பஞ்சாப் விவசாயிகள் நேராக அமிருதசரஸ் பொற்கோவிலுக்கு சென்று போராட்டம் வெற்றியடைந்ததற்கு நன்றி தெரிவித்தார்கள்.