மத்திய அரசுடன் இன்று 9 ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ள நிலையில், விவசாயிகளின் அவல நிலைக்கு விடிவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும், மண்டி அமைப்பு ஆபத்து இருக்காது என்றும், மத்திய அரசு உறுதியளித்தாலும், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் இன்றுடன் 51 வது நாளாக நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் குளிருக்கு மத்தியில், தங்களது உயிரைக்கூடத் துச்சமென மதித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் கிட்டத் தட்ட 2 மாதத்தை நெருங்கி வருகிறது. ஆனால், “எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் திசை மாற்றி வருவதாக” மத்திய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இப்படியான விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, மத்திய அரசு ஏற்கனவே நடத்திய 8 சுற்று பேச்சு வார்த்தைகளிலும், எந்த முடிவும் எட்டப்படாமல் அது தோல்வியில் முடிவடைந்தது. 

குறிப்பாக, விவசாயிகள் போராட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை, இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், விவசாயிகளின் இந்த பிரச்சினையைத் தீர்க்க, 4 உறுப்பினர் குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைத்து உள்ளது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் குறைகளை இந்த குழு முன் தெரிவிக்குமாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். ஆனால், “உச்ச நீதிமன்றம் அமைத்த இந்த குழு அரசுக்கு ஆதரவான குழு” என்று, விவசாய அமைப்புகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளன. 

இதனால், “இந்த குழு முன்பு, நாங்கள் ஆஜராகமாட்டோம்” என்றும், விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில் தான், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பிற்பகல் 12 மணி அளவில் 9 ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடத்துகிறது.

இன்று நடைபெறும் இந்த 9 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில், தீர்வு காணப்படும் என்றும், அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.

இதன் மூலமாக, தங்களது அவல நிலைக்கு விடிவும், முடிவும் ஏற்பட வேண்டும் என்றும், விவசாயிகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

இந்த பேச்சுவார்த்தை குறித்து வேளான் அமைச்சர், நரேந்திர சிங் தோமர் பேசும்போது, “திறந்த மனநிலையுடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது என்றும், மதியம் 12 மணிக்கு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடைபெறும்” என்றும், குறிப்பிட்டார். இதனால், இன்றைய பேச்சுவார்த்தையில், சுமுக உடன்பாடு ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.