“நாய் வேண்டும், ஆமை வேண்டும், அப்ப தான் கல்யாணம் செய்துகொள்வேன்” என்று, மிகவும் வித்தியாசமாக வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையால், கல்யாணம் நின்ற போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் படலம் நடந்து உள்ளது.

இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள, அவரது பெற்றோர் பேசி முடித்து உள்ளனர்.

அதன் படி, பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று, அங்குள்ள ராமநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அந்த பெண்ணுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. 

இந்த நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக, மணமகனின் குடும்பத்திற்குப் பெண் வீட்டார் சார்பில் பல சவரன் தங்க நகைகளும், ரொக்கமாகப் பணமும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் உறவினர்களிடம் இன்னும் கூடுதலாக வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பாக, மாப்பிள்ளை வீட்டார் “வரதட்சணையாக 21 கால் நகங்கள் கொண்ட ஆமை வேண்டும் என்றும், ஒரு கருப்பு லாப்ரடோர் நாய் வேண்டும்” என்று, கேட்டு உள்ளனர். 

இவற்றுடன், “ஒரு புத்தர் சிலை, ஒரு சமாய் விளக்கு ஸ்டாண்ட், 10 லட்சம் ரூபாய் பணமும்” கேட்டதாகத் தெரிகிறது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இப்படியாக இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணும், அவரது தந்தையும், இதற்கு மேலும் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று முடிவு செய்து, இந்த கல்யாணத்தை அப்படியே நிறுத்தி விட்டனர்.

மேலும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் இருந்து ஏற்கனவே 2 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 10 கிராம் தங்கமும் வரதட்சணையாக வாங்கி இருந்தார்கள். 

அதனைத் திருப்பித் தரும் படி, பெண் வீட்டார் கேட்டுள்ளனர். அதனை மாப்பிள்ளை வீட்டார் தர மறுத்துவிட்டதால், இது தொடர்பாகப் பெண் வீட்டார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.