ஒரு தலைக்காதலன் வெறிச்செயல்.. மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் வெட்டிக்கொலை!

ஒரு தலைக்காதலன் வெறிச்செயல்.. மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் வெட்டிக்கொலை! - Daily news

ஈரோடு அருகே மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை, ஒரு தலைக்காதலன் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்து உள்ள பெரிய மொடச்சூர் சங்கரன் வீதியைச் சேர்ந்த 56 வயதான மேரி - தமிழ்தாசன் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, மேரியின் கணவர் தமிழ்தாசன் உயிரிழந்து விட்டார். 

இதனையடுத்து, மேரி மட்டும் தனது 5 மகள்களையும் வளர்த்து வந்தார். அதன் தொடர்ச்சியாக,  மூத்த மகள் அன்னமேரிக்கு மட்டும் திருமணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், அவர் தனது கணவர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, மற்ற 4 மகள்களுக்கும் திருமணம் ஆகாத நிலையில், தயாருடன் வசித்து வந்தனர்.

தயார் மேரி, தன்னுடைய வீட்டிற்கு முன்பாக தள்ளுவண்டியில் “ரெடிமேட் ஜவுளி மற்றும் பேன்சி பொருட்களை” வைத்து விற்பனை செய்து வந்தார்.

அதே நேரத்தில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோயில் அருகில் மேரி தனது 4 மகள்களுடன் வசித்து வந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பர்கூரைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் என்பவர், மேரியின் கடைசி மகளை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி, முருகன் காதல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், தன் தாயாரிடம் முருகனின் தொல்லை குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து, தாயார் மேரி, முருகனிடம் சண்டைக்குச் சென்றுள்ளார். 

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த முருகன், “உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவில்லை என்றால், உங்கள் வீட்டில் யாரும் உயிரோடு இருக்க முடியாது” என்று கடுமையாக எச்சரித்து மிரட்டி உள்ளார். இதனால், முருகனுக்கு பயந்து போன மேரி, தனது 4 பெண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு,  கோபி பெரியமொடச்சூர் சங்கரன் தெருவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில், மேரி தன்னுடைய மருமகன் புஷ்பராஜ், மகள் அன்னமேரி ஆகியோர், மேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதனை தடுக்க வந்த அந்த பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அத்துடன், “உன் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறாயா?” என்றும், ஆவேசத்துடன் சத்தம் போட்டு விட்டு, அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். 

இதில், மேரி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மேரியை மீட்டு, கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் மேரி அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தற்போது உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகள் அமைத்துத் தலைமறைவாக இருக்கும் முருகனைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், பர்கூர் மலைக்கிராமத்தில் தட்டக்கரை வனப்பகுதியில் பதுங்கிருந்த முருகனை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

Leave a Comment