மாப்பிள்ளை பெண் உடையும், மணப்பெண் ஆண் உடையும் அணிந்துக் கொண்டு வினோதமான முறையில் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், “அவ்வை சண்முகி” திரைப்படத்தில் தன், தனது காதல் மனைவிக்காக நடிகர் கமலஹாசன் மாமி வேடம் அணிந்து அசத்தலாக நடித்திருப்பார்.

அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வந்த “ரெமோ” திரைப்படத்திலும், தன்னுடைய காதலுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் செவிலியர் வேடம் அணிந்து, அசத்தியிருப்பார்.

அப்படியான ஒரு சம்பவம் தான், தற்போது ஆந்திர மாநிலத்தில் மிகவும் விநோதமான முறையில், அச்சரியப்பட வைக்கும் வகையில் இந்த திருமணம் நடந்து உள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மர்காபுரம் மண்டலம், தரிமடுகு, குரிச்செடு மண்டலம், தேஷினேனி பல்லி, அர்த்தவீடு மண்டலம், மாவுட்டூர், கம்பம் மண்டலம், ஜங்கங்குண்ட்லா கிராமங்களுக்கு குலதெய்வம் முறைப்படி ஒரு அதிசய பழக்கம் ஒன்று இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், திருமணத்தன்று குலதெய்வ வழக்கப்படி, பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும் என்ற மிகவும் பழமையான மரபு தான் அது. 

அதாவது, குலதெய்வம் முறைப்படி நிச்சயம் செய்த தம்பதியினர் திருமண நாளில் மணமகன், மணமகள் கோலத்திலும்; மணமகள் மணமகன் கோலத்திலும் உடை அணிந்து வந்து, குலதெய்வ கோயில் முன்பாக திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. பாரம்பரியமாகவும், பல்வேறு தலைமுறைகளாகவும் இந்த பழமையான முறையை அந்த கிராம மக்கள் இன்று வரை பின்பற்றி வருகின்றனர்.

அதன் படி, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணமக்கள் அங்கய்யா - அருணா தம்பதிக்கு, சமீபத்தில் குலதெய்வ முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. 

இந்த திருமணத்தில், மணமகள் ஆணை போன்று கூர்தா அணிந்தும், மணமகன் புடவை அணிந்தும் அவர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

அதன் தொடர்ச்சியாக, மணமக்கள் இருவரும் திருமண சடங்கின் ஒரு பகுதியாக கிராம தேவதைகளான அங்கலம்மா, போலராம்மா கோயில்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். 

அப்போது, அந்த குலதெய்வ கோயிலில் உள்ள வன்னி மரத்திற்கும், நாக புற்றுக்கும் பூஜை செய்து மணமக்கள் வழிபாடு செய்தனர். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், இந்த விநோதமான முறையில் நடந்த திருமணத்தை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இந்த திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து, தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.