வேறொரு பெண்ணுடன் கள்ளக் காதல் உறவு வைத்திருந்த கணவனைக் கத்தியால் குத்தி, மனைவி கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கானா நாட்டைச் சேர்ந்த அபிகாயில் என்ற இளம் பெண், நைஜீரியாவைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவரை, கடந்த 2019 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அந்த தம்பதியினர், டெல்லி புறநகர் பகுதியில் வசித்து வந்தனர்.

இளம் பெண் அபிகாயில் தன் வீட்டிலேயே சொந்தமாகத் தின்பண்டம் செய்து விற்பனை செய்து வந்தார். அந்த பெண்ணின் கணவன், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி சண்டை வந்ததால், கணவன் - மனைவி இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

அப்போது, தன்னுடைய கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக் காதல் உறவு இருந்து வந்தது அவரது மனைவிக்குத் தெரிய வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர், தன் கணவரிடம் சண்டைக்கு சென்று உள்ளார். ஆனால், அப்போதும் அவர்களுக்குள் எந்த வித சமாதானமும் ஏற்படாமல், சண்டை போட்டுவிட்டுப் பிரிந்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் இம்மானுவேல், தன் மனைவி அபிகாயிலை பார்க்க அவர் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை வந்துள்ளது. அந்த சண்டையில் இருவருக்கம் இடையேயான வாக்கு வாதம் முற்றி உள்ளது.

அப்போது, கடும் ஆத்திரமடைந்த அவர் மனைவி, தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, கணவனை குத்தி உள்ளார். மனைவி, கணவனை கத்தியால் குத்துவதைப் பார்த்த அப்பகுதி மக்கள், கடும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அந்த பெண்ணிடமிருந்து கத்தியை பிடிங்கி உள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், போலீசார் அந்த இடத்திற்கு வருதற்கு முன்பே, அந்த பெண் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு, அங்கிருந்து தலைமறைவானார்.

அதே நேரத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இம்மானுவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன், மருத்துவமனை தரப்பில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த இம்மானுவேல் உடலில் உள்ள காயங்களைப் பரிசோதித்துப் பார்த்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அவர் மனைவியை தேடி வந்தனர்.

அந்த நேரம் பார்த்து, தலைமறைவான அவர் மனைவி தனது செல்போனை ஆன் செய்து உள்ளார். அதன் படி, அந்த பெண்ணின் செல்போன் லொகேஷனை வைத்து, போலீசார் அந்த இடத்திற்குச் சென்று, அந்த பெண்ணை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “என் கணவன் இம்மானுவேல் மற்றொரு பெண்ணுடன் கள்ளக் காதல் உறவில் இருந்ததால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நான் அவரை கத்தியால் குத்தி விட்டேன். அதில், அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டார்” என்று, தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மெற்கொண்டு வரும் நிலையில், அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.