உத்தரங்காண்டில் தலித் என்ற ஒரே காரணத்திற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட சுனிதா தேவி என்ற சத்துணவு ஊழியர். அவர் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டுருக்கிறார். 

sathunavu

உத்தரகாண்டில் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண் ஊழியர்களுக்கு வைக்கப்படும் பெயர் போஜனமா தேவி. வாழ்நாள் முழுக்க தலித் என்ற ஒரே காரணத்திற்காக மோசமாக இகழப்பட்டு வந்த சுனிதா தேவி தனக்கு அப்படி ஒரு பெயர் கிடைத்ததும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார். கடந்த டிசம்பர் 4-ம் தேதி உத்தரகாண்டில் இருக்கும் சவண்டாரா சங்கிராம் சேனானி ஸ்ரீராம் சந்திரா பள்ளியின் சத்துணவு ஊழியராக நியமிக்கப்பட்ட போது சுனிதா தேவி அப்படித்தான் சந்தோச மிகுதியில் துள்ளிக்குதித்தார். போஜனமா தேவி என்ற பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டதை எண்ணி அகம் மகிழ்ந்தார் சுனிதா தேவி. ஆனால் அந்த சந்தோசம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஓசி பிரிவு மாணவர்கள் அதிகம் படிக்கும் அந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் அசோஸியேஷனின் எதிர்ப்புக்கு பின்புதான் சுனிதா தேவி அங்கு சத்துணவு ஊழியராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. இவர் உணவு சமைத்ததை அங்கு இருந்த ஓசி பிரிவு மாணவர்களும் விரும்பவில்லை.

மேலும் இதனால் 10 நாட்களாக மதிய உணவை பள்ளியில் சாப்பிடாமல் அந்த பள்ளியை சேர்ந்த ஓசி பிரிவு வகுப்பினர் புறக்கணித்து இருக்கிறார்கள். அந்த தலித் பெண் சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம். அவரை வேலையை விட்டு அனுப்புங்கள் என்று பெற்றோரின் தூண்டுதலின் பெயரில் அங்கு படிக்கும் இளம் பிஞ்சுகள் சாதி வெறுப்பை கக்கி இருக்கிறார்கள். விளைவு ஆசிரியர் - பெற்றோர் கூட்டத்திற்கு பின் சுனிதா தேவி டிசம்பர் 13-ம் தேதி பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். நீங்கள் சமைத்தால் பலர் சாப்பிடுவது இல்லை. அதனால் வேலையை விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம் சிங் இந்த முடிவை விரும்பவில்லை. ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை. இருப்பினும். சுனிதா தேவியை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்தே தீருவேன் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அவர் தலித் பிரிவை சேர்ந்தவர்தான். உடனடியாக மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கும் நடந்த விஷயத்தை பிரேம் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் சுனிதா தேவியும் தனக்கு எதிராக சாதிய அடுக்குமுறை திணிக்கப்படுவதாக போலீஸ் நிலையில் புகார் அளித்தார். இதனால் ஐபிசி பிரிவு 506-ன் கீழ் மற்றும் எஸ்சி /எஸ்டி சட்ட பிரிவின் கீழ் பள்ளி நிர்வாகம் மீது வழக்கும் பதியப்பட்டது. ஆனால் அதற்குள் பள்ளிக்கு விமலேஷா என்ற பிராமண பெண் சத்துணவு ஊழியராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் அந்த மாணவர்களின் போராட்டம் தொடங்கியது. பள்ளியில் இருந்த 21 தலித் மாணவர்கள் ஒன்று சேர்ந்து சத்துணவு புறக்கணிப்பு போராட்டம் செய்தனர். வீட்டில் இருந்து கூட உணவு கொண்டு வராமல் மதியம் முழுக்க பட்டினி கிடந்து உணவு புறக்கணிப்பு போராட்டம் செய்தனர். இதனால் மொத்த பள்ளி நிர்வாகமும் அதிர்ந்தது.

சுனிதா தேவி வந்தால்தான் நாங்கள் சாப்பிடுவோம். விமலேஷா சமைப்பதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஏன் சுனிதா தேவியை பணியில் இருந்து நீக்கினீர்கள்.. அவர் சமைத்தால் என்ன பிரச்சனை? இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியாக ஒன்றாக நின்று தலித் மாணவர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து மாணவர்களின் போராட்டத்திற்கு மாவட்ட பள்ளி நிர்வாகம் அடிபடிந்துள்ளது. மீண்டும் சுனிதா தேவியை அதே பள்ளியில் சத்துணவு ஊழியராக அப்பள்ளி நிர்வாகம் நியமித்துள்ளது. இதை பாராட்டி உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த முடிவிற்காகத்தான் காத்து இருந்தேன். இந்த பள்ளியில் நிறைய தலித் மாணவர்களும் இருக்கிறார்கள். ஓசி பிரிவினரும் இருக்கிறார்கள். ஆனாலும் 10 வருடமாக இங்கு ஒரு தலித் பணியாளர் கூட இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவை வரவேற்று உள்ள சுனிதா தேவி, நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். எனக்கு இனி எதுவும் பிரச்சனை இருக்காது என்று நம்புகிறேன். நான் சந்தோசமாக இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவரை மீண்டும் பணிக்கு எடுத்ததற்கு அப்பள்ளியில் படிக்கும் ஓசி பிரிவு மாணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.