கோவிஷீல்டு தடுப்பூசியின் வீரியம் 3 மாதங்களில் குறைந்துவிடும் என்பதால், பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படும் என்று இங்கிலாந்து ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக உலக நாடுகளை இயல்பு நிலைக்கு திரும்பவிடாமல் அச்சுறுத்தி வருகிறது. 

முதல் அலை முடிந்து சற்று ஓய்ந்தநிலையில் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலையை உருவாக்கியது. 

அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

covishield vaccine

இதனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது மீண்டும் உருமாறியநிலையில்  கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபாக கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவக் கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் இந்தியாவில் 3-வது அலை உருவாகலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். 

இந்நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி, ஆஷிஸ் ஷேக் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள். 

அவர்களின் ஆய்வு முடிவுகள் தி லான்செட் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.  அந்த ஆய்வில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 2 டோஸ் செலுத்தி முடித்த 3 மாதங்களில் அதன் வீரியம் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது.

இதே தடுப்பூசிதான் இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்குகிறது. அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேரிடமும், பிரேசிலில் 4 கோடியே 20 லட்சம் பேரிடமும் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொண்ட பின்னர் 2 வாரங்களில் ஒப்பிடும்போது 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் முதல் மூன்று மாதங்களில் தடுப்பூசியின் செயல்திறனில் சரிவு தோன்றத் தொடங்குகிறது. மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் இறப்பு ஆபத்து இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட  இரண்டு வாரங்களுக்குப் பிறகு இரட்டிப்பாக உள்ளது.

covishield vaccine

இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு நான்கு மாதங்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து மற்றும் இறப்பு மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

“தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகள் ஒரு முக்கிய கருவியாகும். ஆனால் அவற்றின் செயல்திறன் குறைவது சிறிது காலமாக கவலை அளிக்கிறது. 

தடுப்பூசியின் பாதுகாப்பு எப்போது குறைய தொடங்குகிறது என்பதைக் கண்டறிவதன் மூலம், அதிகபட்ச பாதுகாப்பு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யக்கூடிய பூஸ்டர் திட்டங்களை அரசாங்கங்களால் வடிவமைக்க முடியும்" என்று இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆஷிஸ் ஷேக் கூறியுள்ளார்.

இது குறித்து மற்றொரு இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி கூறியதாவது:-

“நீங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை இரண்டு டோஸ் எடுத்திருந்தாலும் எங்கள் பணியானது பூஸ்டர்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.