“கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு, தற்காலிகமாகக் குரல் இழப்பு ஏற்படுவதாக” தகவல்கள் வெளியாகி, வேகமாகப் பரவி வருகின்றன.

உலகையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று நோய். 

இப்படியான சூழலில் தான், கொரோனா 3 வது அலையாகத் தனது கோர முகத்தைத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் காட்டத் தயாராகி வருகிறது. ஆனாலும், இந்த கொடிய கொரோனா பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகின்றன. 

குறிப்பாக, “கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் பெண்களை விட, ஆண்களே அதிக அளவு பாதிக்கப்பட்டதாக” கடந்த மாதம் தகவல்கள் வெளியானது.

ஆனால், தற்போது கொரோனா வைரசானால் தொண்டை பாதிக்கப்படுவதையடுத்து சிலருக்குத் தற்காலிகமாகக் குரல் இழப்பு, பேச்சின்மை ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு, குரல் கரகரப்பாவதும், குரல் ஒலி அளவு குறைவதும், சிலருக்கு சில வாரங்களுக்குப் பேச்சே வருவதில்லை என்றும், தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆனால், “கொரோனா விளைவு இல்லை இது மாறாக குரல்வளையில் கிருமி தொற்றினால் கட்டு ஏற்பட்டு பேச்சிழப்பு ஏற்படுகிறது” என்றும், சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக சிஎம்ஆர்ஐ மருத்துவமனையின் நுரையீரலியல் நிபுணர் டாக்டர் ராஜா தர் பேசும் போது, “தற்காலிகமாகத்தான் பேச்சிழப்பு, குரல் இழப்பு ஏற்படுகிறது என்றும், அப்படி பாதிக்கப்படுபவர்களுக்கு 15 நாட்கள் அல்லது அடுத்த 3 வாரங்களில் குரல் வளம் மீண்டும் வந்துவிடுகிறது” என்றும், கூறியுள்ளார்.

மேலும், “கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கீழ் சுவாசப்பாதையைக் கடுமையாகப் பாதிப்பதோடு, மேல் சுவாசப்பாதையையும் பாதிக்கிறது என்றும், இதனால் குரல்வளை அழற்சி ஏற்படுகிறது என்றும், இது சிலருக்கு உடனடியாக ஏற்பட்டு குரல் முற்றிலும் இழக்கப்படுகிறது” என்றும், சிலர் மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

அத்துடன், “கொரோனா பாதித்து முதல் வாரம் முதல் 3 ஆம் வாரத்தில் இப்படியான தொந்தரவுகள் ஏற்படலாம் என்றும், 3 மாதங்கள் வரை குரலிழப்பு இருக்க வாய்ப்பு உள்ளது” என்றும், மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

அதே நேரத்தில், “இது நிரந்தரமாகக் குரலை பாதிக்காது என்றும், திடீரென குரலை இழக்கும் போது, அதனால் ஏற்படும் மனக்கவலை பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், இந்த நோய்க்கு ‘கோவிட் வாய்ஸ்’ என்றும் தற்போது பெயரிடப்பட்டு உள்ளதும்” குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, “கொரோனா பாதிப்பு அல்லாமல் நோய்த் தொற்றுக்குப் பிறகு நீண்ட கால களைப்பு அறிகுறிகளினாலும், குரல் முற்றிலுமாக போக வாய்ப்பிருக்கிறது என்றும். பொதுவான கடும் களைப்பு ஆற்றலிழப்பு ஆகியவையும் குரல்வளையைப் பாதிப்பதால் குரலிழப்பு ஏற்படுகிறது” என்றும், மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டவர்களுக்குத் தற்காலிகமாகக் குரல் இழப்பு ஏற்பட்டு வருவது, கொல்கத்தாவில் பொது மக்களிடையே பீதியையும், பெரும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.