“நீங்க சந்தோஷமா இருபிங்க.. நான் மட்டும் அவஸ்தை படணுமா?” என்று, கேட்டுக்கொண்டு மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த கொரோனா பாதித்த மாமியாரால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய நோய் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. 

குறிப்பாக, கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி, “தனித்து இரு.. ️விலகி இரு.. ️வீட்டிலேயே இரு..” என்று, மத்திய - மாநில அரசால் தொடர்ந்து அறிறுவுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றை பெரும்பாலான மக்கள் முறையாகப் பின்பற்றாமல் இருந்து வருவதும் கொரோனா பரவலக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கொரோனா இப்படியாகத் தீவிரமாகப் பரவத் தொடங்கியதால் தான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாள் தோறும் பாதிக்கப்படுவோரும் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாகவும், முக்கியமாக மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே “கொரோனா தனிமையே கொடுமையிலும் கொடுமை” என்று, பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட மாமியார் ஒருவர், மருமகள் மீது கொண்டு கடுமையான வெறுப்பின் காரணமாக, அவரை கட்டிப்பிடித்து கொரோனா தொற்றை அவருக்கும் பரப்பிய சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த, திருமணம் ஆன 20 வயது இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அவரது சகோதரியே கொண்டு வந்து சேர்த்தார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சூழலில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது திருமணம் ஆன பெண்ணிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் “இந்த கொரோனா தொற்று எப்படி உங்களுக்குப் பரவியது?” என்று, விசாரித்து உள்ளனர்.

அப்போது, அந்த இளம் பெண் சொன்ன பதிலை கேட்டு, அந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சியும், மிரட்சியும் அடைந்துபோனார்கள்.

அதற்குக் காரணம், அந்த பெண் அளித்த பதில் தான். அதாவது, “என் கணவர் டிராக்டர் டிரைவராக ஒடிஷாவில் வேலை பார்க்கிறார். வீட்டில் என் மாமியாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருக்கு சாப்பாட்டைத் தனியாக நாங்கள் வழங்கி வருகிறோம். பேரக்குழந்தைகளும் அவர் அருகில் செல்வதில்லை. நாங்களும் விடுவதில்லை. இதனால், வெறுப்படைந்த என் மாமியார், அடிக்கடி எங்களிடம் சண்டை போட்டு வந்தார். 

இப்படியே சில நாட்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, “நான் இங்க தனிமையில் செத்துக்கொண்டு இருக்கிறேன். நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கிறீர்களா?” என்று கோபமாகவே எங்களைப் பார்த்து கேட்டார். 

இதற்கு நான் எந்த பதிலும் கூறாமல் இருந்த நிலையில், “நீங்க சந்தோஷமா இருபிங்க.. நான் மட்டும் அவஸ்தை படணுமா?” என்று, கேட்டுக்கொண்டு ஓடி வந்து என்னை என் மாமியார் கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால், எனக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனையடுத்து, அவர்கள் என்னை என் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். இதையடுத்து என் சகோதரி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். அங்கு, எனக்குத் தொற்று தீவிரம் அடைந்ததால், வேறு வழியில்லாமல் இந்த மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்து உள்ளனர்” என்று, அப்பாவியாகவும், பரிதாபமாகவும் கூறினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த கொரோனா பாதித்த மாமியார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருகின்றனர்.