வீட்டை விட்டு ஓடி வருபவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகப் புதிதாகக் கடை ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.

உலகமயமாக்கல் எனும் புதிய உலகுக்குள் எல்லாமே வியாபாரம் ஆகிவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையில் எல்லாமே பிஸினஸ் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, “பூ கடைகளுக்கு விளம்பரம் தேவையா?” என்ற பழமொழி, தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், அந்த பழமை பொருந்திய பழமொழியையும், பொய்யாக்கும் விதமாக, சென்னை, கோவை, திருச்சி போன்ற தமிழகத்தின் பெரு நகரங்களில் ஃப்ளவர் பொக்கே ஷாப்கள் உருவாகி, விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தான், ஹரியானா மாநிலத்தில் இயங்கும் ஒரு கடையில் “காதலிக்கும் ஜோடிகளுக்கு உதவி செய்யும் வகையில்” ஒரு சிறப்பு அறிவிப்பு ஒன்றை அந்த கடையின் வெளியே எழுதித் தொங்கவிடப்பட்டு இருக்கிறது.

அதாவது, வீட்டை விட்டு ஓடி வருபவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காகப் புதிதாகக் கடை ஒன்று திறக்கப்பட்டு இருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில் பெற்றோர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் காதல் ஜோடிகளுக்கு, உதவி செய்வதற்காக ஒரு மையமே தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ளது.

ஹரியானா மாநிலம் பஞ்குலா பகுதியில் அமைந்து உள்ள ஒரு கடைக்குச் சென்று, காதல் ஜோடிகளோ, அல்லது காதல் ஜோடிகள் சார்பில் அவர்களது நண்பர்களோ திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினால், அவர்களுக்கான தாலி, திருமண உடை, போட்டோகிராப், திருமணப் பதிவு, வழக்கறிஞர் ஃபார்மாலிட்டிஸ், இப்படியாக பதிவு திருமணத்திற்கு ஆகும் மொத்த விசயங்களும் இந்த கடையில் செய்து தரப்படும். ஆனால், இவையெல்லாம் இலவசம் கிடையாது. இது ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக விலை பட்டியல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த விலை பட்டியலின் படி, சாதாரணமாக ஒரு திருமணத்திற்கு 5,100 ரூபாய் முதல், 16,000 ரூபாய் வரை, செலவுகள் ஆகும் என்றும், அந்த கடையைத் திறந்துள்ள இளைஞர்கள் கூறுகிறார்கள்.

இவற்றுடன், காதல் ஜோடிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கேஜ்கள் இன்னும் இருப்பதாகவும், திருமணம் செய்து வைக்க கடை திறந்திருப்பவர்கள் கூறுகிறார்கள்.

இது மட்டுமில்லாமல், திருமணத்திற்கான இந்த ஒட்டு மொத்த ஏற்பாடுகளையும், வெறும் 2 நாளில் அவர்கள் ஏற்பாடு செய்து, முறைப்படி, அரசு பதிவு திருமணத்தைச் செய்து முடிக்கிறார்கள் என்றும், கூறப்படுகிறது. 

குறிப்பாக, தற்போது புதிதாகத் திறந்து உள்ள இந்த திருமண மையத்தில், மாதத்திற்கு 70 முதல் 80 திருமணங்கள் வரை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

முக்கியமாக, திருமணம் செய்யும் ஜோடிகளின் வீட்டில் இருந்து, அந்த காதல் ஜோடிகளுக்கு கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வரும் போதும், இந்த கடைக்காரர்களே நீதிமன்றத்தில் ஆஜராகி சம்மந்தப்பட்ட காதல் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு பெற்றுத் தருவது வரை, இந்த கடைக்காரர்கள் முன்னாடி சென்று, சேவை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.