“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக, தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே மேல்” என்று, பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தனது கட்சியைச் சேர்ந்தவர்களைத் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து, தொடர்ச்சி சர்ச்சைகளில் சிக்கி வருவது வாடிக்கையாக நடக்கும் ஒரு நிகழ்வாகவே இருந்து வருகிறது. 

அந்த வகையில், இந்த முறை தனது சொந்த கட்சியில் உள்ள பாரத பிரதமரின் அதிகாரிகளையே அவர் குறிப்பிட்டு மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து உள்ளார்.

அதன் படி,

இந்தியாவில் அதி வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொரோனாவின் 2 வது அலையிலேயே, இந்தியாவில் ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

இதுவரை 2 கோடி பேருக்கு மேல் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 2 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்து உள்ளார்கள். 

இந்த நிலையில், இந்தியாவின் மருத்துவத்துறை வல்லூநர்களும், அறிவியல் துறை வல்லுநர்களும் “இந்தியாவில் கொரோனாவின் 3 வது அலை பரவ வாய்ப்பு உள்ளது” என்று, தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

அதே போல், இந்தியாவின் மருத்துவத்துறை வல்லூநர்களும், அறிவியல் துறை வல்லுநர்களும் கொரோனா விசயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை மிக கடுமையாக விமர்சித்து, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர்கள் கடிதமும் எழுதி, “எங்கள் எச்சரிக்கை பிரதமர் மோடியை சென்று சேர வில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றும், அதில் குறிப்பிட்டு இருந்தனர்.
 
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர்களில் மிக முக்கியமானவரான சுப்பிரமணியன் சுவாமி, தனது டிவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் அதிகாரிகளை மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில், “கொரோனா 3 வது அலை குழந்தைகளை கடுமையாகப் பாதிக்கும் என்று, 2 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“இப்போது, நிதி ஆயோக் உறுப்பினர் மூன்றாவது அலை பேராபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்து உள்ளார். அதனை உறுதியும் படுத்தி உள்ளார்” என்றும், அதில் சுட்டிக்காட்டி உள்ளார். 

குறிப்பாக, “நமக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக, தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தேவை” என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமரின் அதிகாரிகளை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது, இந்தியா முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. அத்துடன், இந்த விமர்சனமானது, இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சியினர் மத்தியில் மிகப் பெரிய பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இதே போல், முன்னதாக “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது” என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மிக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து, தனது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.