“மேற்கு வங்க இடைத் தேர்தலில் மம்தாவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி பாஜகவுக்கு சாதகமாக நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை” என்று, காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது, பாஜகவிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து உள்ளது. 

எனினும், “அங்கு திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தாலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி தோல்வி அடைந்தார்” என்று, அறிவிக்கப்பட்டது.

அதாவது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் கோட்டை பபானிபூர் தொகுதி ஆகும். ஆனால், சுவேந்து அதிகாரி சவாலை ஏற்றுக்கொண்டு, கோட்டையை விட்டு நந்திகிராமில் மம்தா இந்த முறை போட்டியிட்டார்.

ஆனால், அங்கு அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். 

முக்கியமாக, அங்கு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, ஆரம்பத்தில் பின்னடைவில் மம்தா இருந்தார், பின்னர், 6 வது சுற்றுக்குப் பின் மீண்டும் முன்னிலை பெற்றார்.

முடிவில் மம்தா 1,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தகவல் வெளியானது. ஆனால், தேர்தல் ஆணையம் மம்தா தோல்வியடைந்ததாகக் கடைசியில் அறிவித்தது. 

பின்னர், சுவேந்தின் வெற்றியை எதிர்த்து மம்தா வழக்கு தொடுத்தார்.

அத்துடன், இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்குள் அடுத்த தேர்தலே வந்துவிடும். இந்த விசயம், மம்தாவுக்கும் தெரியும். 

அதே நேரத்தில் 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தலில் எம்எல்ஏ வானால் தான், முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியும் என்பது மம்தாவுக்கு நன்றாக தெரிந்த விசயம் தான். 

இதனால், அவர் அங்கு எம்எல்ஏவாக இருந்த ஷோபன்தேவ் சட்டோபாத்யாயை ராஜினாமா செய்ய வைத்தார். 

தற்போது அந்தத் தொகுதியோடு சேர்த்து மொத்தம் 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 

அதன் படி, வருகின்ற 30 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் அங்கு நடைபெறுகிறது.

இதனால், அங்கு வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என்று மீண்டும் அங்கு தேர்தல் பரபரப்புகள் தொடங்கி உள்ளன. 

பபானிபூர் மம்தாவின் ஆஸ்தான தொகுதி ஆகும். இரு முறை அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சரானார். 

ஆளுங்கட்சி தலைவர், முதலமைச்சர், பேவரைட் தொகுதி என மம்தாவிற்கே சாதகமான அம்சங்கள் அதிகமாக அங்கு உள்ளன. 

தற்போது, அங்கு மம்தாவை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறது. யாரை நிறுத்தலாம் என ஆலோசித்து வருகிறது. 

இந்த நிலையில் தான், அங்கு 3 வது அணியாக உள்ள காங்கிரஸ் மற்றும் இடது சாரியின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தான், “பவானிப்பூர் தொகுதியில் மம்தா பேனர்ஜியை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்தப் போவதில்லை” என்று, காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, “பவானிப்பூரில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி, பாஜகவுக்கு சாதகமாக நிலையை நாங்கள் ஏற்படுத்தக் கட்சி தலைமை விரும்பவில்லை” என்று, வெளிப்படையாகவே பேசி உள்ளார்.

மேலும், “வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலைக் கருத்தில்கொண்டு சோனியாவும், மம்தாவும் கை கோர்த்திருக்கிறார்கள் என்றும், அதன் அடிப்படையிலும் இந்த முறை இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும், கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

எது எப்படியோ, பவானிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாமல் இருப்பது, பாஜகவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.