“பாஜகவுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போடும் வகையில் பாஜகவால் நேரடியாக பாதிக்கப்பட்ட பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்டவர்களை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமித்திருப்பது, பாஜகவுக்கு மேலும் நெருக்கடிககைள ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக” அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அதாவது உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதில், உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. 

அதன்படி, வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7 ஆம் தேதி வரை, 7 கட்டங்களாகவே நடைபெற இருக்கின்றன. 

இப்படியாக, தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே மிஞ்சி உள்ள சூழ்நிலையில், உத்தரப் பிரதேச அரசியல் களத்தில் நொடிக்கு நொடி சரவெடியான பல சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

அதன்படி, பாஜகவிலிருந்து ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். இப்படியாக, பாஜகவில் இருந்து விலகும் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து அவரது கட்சியல் சேர இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. 

இதனால், உத்திரப் பிரதேச அரசியல் களம் தற்போது சூடு பறந்துகொண்டிருக்கிறது. 

இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் காங்கிரஸ் சார்பில் பொதுச் செயலாளரும் உத்திரப் பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி, அந்த மாநிலத்தில் பம்பரமாய் சுற்றி சுற்றி தேர்தல் பணிகளை ஆற்றிக்கொண்டு இருக்கிறார்.

குறிப்பாக, இந்த முறை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவோரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிரியங்கா காந்தி முன்னதாக வெளியிட்டு உள்ளார். 

இதில், மொத்தம் 125 பேர் கொண்ட அந்த வேட்பாளர் பட்டியலில், 50 பேர் பெண்கள் இடம் பெற்று உள்ளனர். 

முக்கியமாக, கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமியின் தாய் ஆஷா சிங்கும், இந்த முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். 

உன்னாவ் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பதவிக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போட்டியிடுவதால், இது பாஜகவுக்கு மிகப் பெரிய பேரிடியாக அமைந்து உள்ளது. 

இதன் மூலமாக, உன்னாவ் வன்கொடுமை சம்பவத்தை அந்த மாநிலத்தையும் தாண்டி, நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கான முதல் அடியாகவே, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நியமித்து இருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அங்குள்ள உம்பா கிராமத்தில் நிலம் தொடர்பான கோண்ட் பழங்குடியினரின் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த ராம்ராஜ் கோண்ட் என்பவரும், முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை சந்திக்க முயன்றபோது, அந்த மாநில போலீசாரால் மிக கடுமையாக தாக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியருமான பூனம் பாண்டே என்பவரும் இந்த முறை காங்கிரஸ் கட்சியின் எல்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அதே போல், CAA எதிர்ப்பு போராட்டத்தால் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாபர் வேட்பாளராகி அறிமுகம் ஆகி உள்ளார். 

மிக முக்கியமாக தற்போது வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 40 சதவீத சீட்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று பிரியங்கா காந்தி ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அதன் படியே, மொத்தமுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்களுக்கு தற்பேர்து ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும், உத்தரப் பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய திருப்பமாக பார்க்கபடுகிறது.

என்றாலும், ஆட்சியை தக்கவைக்க பாஜக அங்கு பெரும்பாடு பட்டு கொண்டிருக்கிறது. இது எடுபடுமா? யார் வெற்றிப் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.