கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.  வரலாற்றில் முதல் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், தென் இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடமாட்டம் - சீன ஊடுருவல் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்படியான ஒரு கேள்விக்கு, இந்தியா- சீனா எல்லையில் கடந்த 6 மாதங்களில் ஒரு ஊடுருவல் கூட நடைபெறவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த 6 மாதங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மொத்தம் 47 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 24 ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

ஜூலை மாதத்தில் 11 முறையும், மே மாதத்தில் 8 முறையும், மார்ச் மாதத்தில் 4 முறையும் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளதாவும், ஜூன் மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஊடுருவல் முயற்சி நடைபெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் நிதர்சனத்தில் இந்தியா சீனா எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்தியாவுக்கு உள்பட்ட இடத்தை சீனா ஆக்கிரமித்து இருந்தது. இதை நேற்று பகிரங்கமாக ராஜ்நாத் சிங் ஒப்புக் கொண்டு இருந்தார். சுமார் 38.000 சதுர கி. மீட்டர் தொலைவுக்கான இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று அவர் இதே மக்களவையில் தெரிவித்தும் இருந்தார். இத்துடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நிலப்பரப்பை ஆக்கிரமித்து சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வார்த்து இருந்தது குறித்தும் குறிப்பிட்டு இருந்தார் அவர். மேலும், இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றார். அப்படியிருக்கும்போது, ஊடுருவலே இல்லையென்ற என்ற இன்றைய அறிவிப்பு, மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்தியா மற்றும் சீனாவுடனான எல்லை விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவைவில் விளக்கமளித்துள்ளார். கடந்த ஜூன் 15ம் தேதி லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் நாட்டிற்காக உயிர்நீத்த 20 இந்திய ராணுவ வீரர்களை நினைவுகூர்ந்தார். நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து அவர்களுக்கு உற்சாகமூட்டினார் என்று தெரிவித்தார்.

மேலும் அருணாச்சலப் பிரதேசத்தில் 90,000 சதுர கி.மீட்டரை சீனா உரிமை கோருவதாக விளக்கமளித்துள்ளார். லடாக்கில் 38,000 சதுர கி.மீட்டரை சீனா ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5,180 சதுர கி.மீட்டரை பாகிஸ்தானும் சீனாவுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா ஏற்க மறுப்பதே, எல்லையில் பதற்றம் நீடிப்பதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். 1993 மற்றும் 1996ம் ஆண்டுகளில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில், லடாக் எல்லையில் சீனா தனது படைகளை குவித்திருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்திய ராணுவத்தை தூண்டும் வகையில் சீன ராணுவம் செயல்பட்டு வருவதாகவும், சீனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் எல்லையை பாதுகாப்பதில் நமக்குள்ள உறுதியை யாரும் சந்தேகிக்க தேவையில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.