சமூக வலைதளம் மூலம் பழகி கல்லூரி பெண்களை காதலிப்பது போல் நாடகமாடும் இளைஞனை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த 25 வயதான அருண் கிறிஸ்டோபர் என்ற இளைஞர், பொறியியல் படித்து விட்டு தற்காலிகமாக மின்வாரிய துறையில் பணி புரிந்து வருகிறார். 

மேலும், சமூக வலைதளில் மூழ்கி இருந்த அருண் கிறிஸ்டோபர், சமூக வலைத்தளங்கள் மூலமாக பல கல்லூரி மாணவிகளுக்கு காதல் வலை விரித்து வந்துள்ளார். அதன் படி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் அவர் நட்பாக அறிமுகம் ஆகி உள்ளார். அதன் பிறகு, சில மாதங்கள் கடந்த நிலையில், அருணும் அந்த கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து உள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்ட நிலையில், சில காலம் செல்போனிலேயே காதலித்து விட்டு, அதன் பிறகு அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து காதல் வளர்த்து வந்து உள்ளனர்.

இவர்கள் காதலிக்கும் போது தனிமையில் பேசிக்கொண்ட ஆபாச உரையாடல்கள் உட்பட அனைத்து உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களையும் அருண் கிறிஸ்டோபர் தனது செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டு உள்ளார். 

இதனையடுத்து, தனது காதலியான கல்லூரி மாணவியின் பிற தோழிகளை “எனக்கு இன்ட்ரோ கொடுக்க வேண்டும்” என்று கூறி, அவர்களுடைய செல்போன் எண்ணையும் வலுக்கட்டாயமாகக் கல்லூரி மாணவியின் செல்போனிலிருந்து அருண் கிறிஸ்டோபர் எடுத்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, அதிலிருந்து அவரின் சக தோழிகளுடன் நட்பாகப் பழகி குறுஞ்செய்திகளையும், தன்னுடைய புகைப்படங்களையும் அனுப்பி வந்து உள்ளார். இந்த சாட்டிங் ஒரு கட்டத்தில் எல்லை மீறி போய் உள்ளது. இதனால், பயந்து போன அந்த கல்லூரி மாணவிகள், தங்களது தோழியின் தந்தையிடம் இந்த இளைஞன் குறித்து முறையிட்டு உள்ளதோடு, அந்த பெண்ணின் காதல் குறித்கும், அந்த காதலன் குறித்தும் பல குற்றச்சாட்டுக்களைக் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தந்தை, தன் மகளிடம் இது குறித்து விசாரித்து உள்ளார்.

அதற்கு, அந்த மாணவி, “அவன் யாரென்று தெரிய வில்லை என்றும், யாரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து விட்டதாகவும்” கூறி சமாளித்து உள்ளார். 

அதே போல், “எனது செல்போன் எண்ணிற்குத் தகாத முறையில் குறுஞ்செய்திகள் வருவதாகவும்” அந்த மாணவி, தனது தந்தையிடம் முறையிட்டு உள்ளார். 

இதனால், பயந்து போன அந்த கல்லூரி மாணவியின் தந்தை, “கல்லூரியில் படிக்கும் எனது மகளுக்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தகாத முறையில் பல விதங்களில் ஆபாசமாக குறுஞ்செய்திகளைத் தொடர்ச்சியாக அனுப்பி வருவதாக’ கூறி, சென்னை அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் மனு அளித்தார்.

மேலும், அந்த புகாரில், “எனது மகளின் செல்போன் எண்ணிற்குத் தகாத முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பும் அந்த நபர், எனது மகளின் தோழிகளின் செல்போன் எண்ணையும் கேட்டும் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொந்தரவு செய்து வருகிறார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

குறிப்பாக, “அப்படி, தோழிகளின் செல்போன் எண்ணை தரவில்லை என்றால், மார்பிங் செய்யப்பட்ட எனது மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவதாகவும், அந்த நபர் மிரட்டல் விடுத்து வருவதாகவும்” குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கல்லூரி மாணவிக்கு அழைப்பு விடுத்த செல்போன் எண்ணை டிரேஸ் செய்த போது, அது தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த 25 வயதான அருண் கிறிஸ்டோபர் என்பவரது செல்போன் எண் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், அருண் கிறிஸ்டோபர் மற்றும் கல்லூரி மாணவி ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் சமூக வலைத்தளம் மூலம் நட்பாகப் பழகி, பின்னர் சில மாதங்கள் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, அருண் கிறிஸ்டோபர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரது செல்போனை சோதனை செய்து பார்த்து உள்ளனர். அப்போது, அதில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பதை கண்டு போலீசார் கடும் திர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருண் கிறிஸ்டோபரிடம் போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.