தெலங்கானாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பெண் பயிற்சி விமானி உட்பட 2 பைலட்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

accident

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள துங்கதுர்த்தி கிராமத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பெண் பயிற்சி விமானி உட்பட 2 பைலட்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நல்கொண்டா மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்த விமான விபத்தில் உயிரிழந்த அந்த பெண் பயிற்சி விமானி சென்னையைச் சேர்ந்தவர். அவரது பெயர் மகிமா. அவருடன் பயணித்த இன்னொரு விமானியும் விபத்தில் பலியாகியுள்ளார். அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இந்த விபத்து இன்று காலை 10.50 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தானது குடியிருப்புப் பகுதிக்குள் நிகழவில்லை. வெட்ட வெளியில் அதாவது விவசாயிகளின் வயல் வெளியில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் அதன் பாகங்கள் அனைத்தும் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. சம்பவம் நடந்த உடனே அங்கிருந்த விவசாயிகள் நல்கொண்டா காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்புப் படையினருடன் சம்பவ இடம் வந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் அந்த விமானம் ஹைதராபாத்தைச் சேர்ந்த விமானப் பயிற்சி பள்ளியான Flytech Aviation Academy-க்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இந்த விமானமானது ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள மச்செர்லா என்ற இடத்திலிருந்து கிளம்பியுள்ளது. இந்த வழியாக மகிமா பல முறை விமானத்தில் பயிற்சி மேற்கொண்டதக தெரிகிறது. இச்சூழலில் இன்று நடைபெற்ற பயிற்சியில் தான் எதிர்பாரா விதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளில் விமானம் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுக்கிறது.