சென்னையில் ரவுடியுடன் கள்ளக் காதல் வைத்திருந்ததின் காரணமாக, அந்த ரவுடியும் அவரது நண்பர்களும் கள்ளக் காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை 
கொடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செனாய் நகர் குடிசை பகுதியில் வசித்து வரும் 45 வயது அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலைகளைச் செய்து பிழைத்து வந்தார்.

அமுதாவிற்கு, 22 வயதில் மன நலம் பாதிக்கப்பட்ட மகள் ஒருவர் இருக்கிறார். இதனால், வெகு தூரம் வேலைக்கு செல்லாமல், வீட்டின் அருகிலேயே அவர் வேலைக்குச் சென்று வந்து உள்ளார்.

மேலும், அமுதாவிற்கு கணவர் இல்லாமல், மகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி லிங்கத்திற்கும் அமுதாவிற்கு கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 13 ஆம் தேதி இரவு, வீட்டில் தனது மகளுடன் அமுதா தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, கதவை உடைத்துக் கொண்டு ரவுடி லிங்கம் மற்றும் அவனது 2 நண்பர்களும் அமுதாவின் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர். 

கதவு உடைக்கும் சத்தம் கேட்டு கண் விழித்த அமுதாவும், அவரது மகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, அவர்கள் 3 பேரும் சேர்ந்து, மன நலம் பாதிக்கப்பட்ட அந்த 22 வயது இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அமுதா சத்தம் போட்டுக் கூச்சலிடவே, அவர்கள் 3 பேரும், அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர். இதனையடுத்து, கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமுதா புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான ரவுடி லிங்கம், லிங்கத்தின் கூட்டாளிகளான ஆனந்த் மற்றும் சிவா ஆகியோர் தான், வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. 

அந்த 3 பேர் மீதும் பாலியல் பலாத்கார முயற்சி, வீடு புகுந்து மிரட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ரவுடி லிங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அமுதாவிற்கும் கள்ளக் காதல் இருக்கும் உண்மை தெரிய வந்தது. இதன் காரணமாக, இந்த வழக்கின் உண்மைத் தன்மை குறித்து, போலீசார் அமுதாவிடம் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.