உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது தலித் இளம்பெண், நான்கு இளைஞா்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது உடலை மாநில போலீஸாா் இரவோடு இரவாக தகனம் செய்தனா். இது நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் சடலத்தை அவரது குடும்பத்தினருக்கு தெரியாமல் காவல்துறையினர் தகனம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனா். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த வழக்கில் தொடா்புடையவா்களை குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் காப்பாற்ற முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பாலியல் கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த இளம் பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்ததாக அவரின் சகோதரா், சந்த்பா காவல் துறையில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐ நடத்தும் என மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்தாா். 

அதன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நால்வரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவி, லவ்குஷ், ராமு, சந்தீப் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் தனித்தனியாகவும் ஒன்றாக வைத்தும் விசாரணை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், சிபிஐ அதிகாரிகளைக் கொண்ட மற்றொரு குழுவினர், அப்பெண் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தைத் தொடா்ந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்து விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடைபெற்ற நாளன்று என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரத்தை குடும்பத்தினரிடம் கேட்டறிந்தனா். மேலும், தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

பெண்ணின் சகோதரா் அந்த இடத்தை சிபிஐக்கு அடையாளம் காட்டினாா். குற்றம் நடந்த இடத்தில் காவலா்களை நிறுத்தும்படி காவல்துறையினருக்கு சிபிஐ உத்தரவிட்டது. சிபிஐயுடன் வந்திருந்த மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (சிஎஃப்எஸ்எல்) நிபுணா்கள் அந்த பகுதியில் தடயங்களைச் சேகரித்த நிலையில், இன்று குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முன்னராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ``உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நிகழ்ந்ததைஏஈ போலவே ராஜஸ்தானிலும் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றது. அதை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஹாத்ரஸ் சம்பவம் மட்டும் அரசியலாக்கப்படுகிறது. சம்பவத்தில் தொடா்புள்ளவா்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா். அதனை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐயும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தை எவரும் அரசியலாக்க கூடாது" என்று செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.