சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் விக்கெட் எடுத்து சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர பந்துவீச்சாளார்  ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் அடுத்த தொடர்களை இன்று  எதிர்கொள்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இந்தநிலையில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாகப் போட்டியைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசு கிரிக்கெட்போட்டிகளை பார்க்க 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளதைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய  கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இதுவரை 122 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடியுள்ளன. இதில் 47 இங்கிலாந்தும்,26 போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 49 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

அதேபோல் 1933 முதல் 2016 வரை 15 முறை இங்கிலாந்து அணி இந்தியா வந்து டெஸ்ட் தொடர் விளையாடி இருக்கிறது. இதில்  5 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 7 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை மைதானம் எப்போதும் கிரிக்கெட் வீரர்களுக்கு கோட்டையாக இருந்துவருகிறது. சென்னையில் 22 ஆண்டுகளாக இந்திய அணி இதுவரை தோற்றதில்லை. 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் 759 ரன்களை  குவித்து சாதனைப்படைந்தது. இந்த ரன்கள் தான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்கள்  ஆகும்.

இதேபோட்டியில் 303 ரன்கள் அடித்து இந்திய ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார் இளம் வீரர் கருண் நாயர். 2013 ஆம் ஆண்டு தோனி 224 ரன்களை அடித்தார். இப்படி பல வீரர்களுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் சாதனை படைக்கும் கோட்டையாக திகழ்ந்து வருகிறது.

இந்த வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா சொந்த மண்ணில், அதுவும் சென்னையில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை  எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவை அனைத்தும் வெளிநாட்டு மைதானங்களில்  அவர் எடுத்தவையாகும். பும்ரா இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் போட்டி விளையாடவில்லை. இந்த தொடரில் தான் முதல் முறையாக சொந்த மண்ணில் களமிறங்கியுள்ளார் பும்ரா.

இங்கிலாந்து அணி டாஸ்வென்று முதலில் பேட்டிங்  செய்வதாக அறிவித்தது. ரோரிபர்ன்ஸ், டாம் சிப்லி இணை முதலில் களம் இறங்கி நிதானமாக ஆட்டத்தை துவங்கினர். 63 ரன்கள்  அடித்திருந்த போது அஸ்வின் பந்தில் ரோரி பர்ன்ஸ் 33 ரன் இருக்கும்  நிலையில்  ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் இறங்கிய டேன் லாரன்சை ரன் எதுவும் எடுக்கவிடாமல்  டக்கவுட் செய்து சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்ட் விக்கட்டை பதிவு செய்தார் ஜஸ்பிரித் பும்ரா.இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பும்ராவிற்கு வாழ்த்துக்களும் பகிரப்பட்டு வருகிறது. 
அப்போது இங்கிலாந்து அணி 121 ரன்கள் அடித்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
அதன்பின்பு பேட்டிங்கில் இணைந்த ஜோ ரூட் மற்றும் சிப்லி இருவரும் நிதானமாக ஆடி 150 பார்னர்ஷிப் அடித்தனர். 20 ஓவர்களுக்கும் மேலாக விக்கெட் எதுவும்  இந்திய அணி திணறியது. இந்தநிலையில் 90 வது ஓவரில் 87 ரன்கள் எடுத்திருந்த சிப்லி பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.ஜோ ரூட் 128 ரன்களுடம் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 263/3  என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.