குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென தன் பதவியைச் செய்துள்ள நிலையில், குஜராத்தின் அடுத்த முதலமைச்சர் போட்டியில் 2 மத்திய அமைச்சர்கள், துணை முதல்வர், எம்பி, லட்சத்தீவு அதிகாரி என முதல்வர் பதவிக்கு மொத்தம் 6 பேர் இடையே கடும் போட்டி நிலவுவது, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, பாஜகவைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தார். 

பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத் மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் தான், விஜய் ரூபானி தமது பதவியை திடீரென்று அவர் ராஜினாமா செய்திருப்பது சக பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன் படி, அகமதாபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய் ரூபானி, தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் கொடுத்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் “முதலமைச்சராகப் பொறுப்பு வழங்கி, மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு நன்றி” என்று,  தெரிவித்தார்.

இதனையடுத்து, பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் குஜராத்துக்கு சென்று, அங்குள்ள நிலைமை குறித்து விசாரித்தனர். பின்னர், அங்குள்ள காந்தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர்கள் ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணை முதலமைச்சர் நிதின் படேல், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் மற்றும் ரூபானி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதையடுத்து புதிய முதலைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தின் இறுதியிலேயே யார் முதலமைச்சர் என்பது முடிவு செய்யப்படும் என்றகிற தகவலும் வெளியாகி உள்ளன.

எனினும், விஜய் ரூபானியின் திடீர் ராஜினாமா குறித்தும் பரபரப்பு தகவல்கள் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது, “கொரோனா 2 ஆம் அலையின் 
போது, குஜராத் அரசு சரியாக செயல்படவில்லை என்று அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டித்தது. கொரோனா இறப்புகள் தொடர்பாக புள்ளி விபரங்களை முதல்வர் அலுவலகம் மறைத்ததாகச் சர்ச்சையும்” எழுந்தது. 

இதன் காரணமாக, ரூபானியின் மீது பிரதமர் மோடி மட்டுமின்றி, கட்சி தலைமையும் கடும் அதிருப்தியில் இருந்தது. 

வரும் தேர்தலில் விஜய் ரூபானி மற்றும் மாநில பாஜகவுக்கு பெரும் எதிர்ப்பு இருக்கும் என்பதால், அதனை சமாளிக்கவும் படேல் சமூக வாக்குகளைக் கவருவதற்காகவும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த விஜய் ரூபானி, தற்போது தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில் தான், குஜராத்தின் அடுத்த முதலமைச்சர் பட்டியலில் பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

அதன் படி, குஜராத்தின் புதிய முதலமைச்சர் பட்டியலில், துணை முதல்வர் நிதின் படேல், மாநில வேளாண் அமைச்சர் ஆர்.சி.பால்து, மத்திய அமைச்சர்கள் பூர்ஷோட்டம் ரூபாலா, மன்சுக் மண்டவியா உள்ளிட்டோரின் பல பெயர்கள் அடிபடுகிறது.

மேலும், “அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு முன்பாக பெரும்பான்மையாக உள்ள படேல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சரா ஆக்கிவிட்டால், வரும்
தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்” என்று, பாஜக வியூகங்களை அமைத்து உள்ளது.

இதனால், தற்போது புதிய முதல்வர் பதவிக்கான போட்டியில், தற்போதைக்கு 6 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் மன்சுக் மண்டவியா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மத்திய அமைச்சராகப் பதவியேற்றதால், அவருக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. 

குறிப்பாக, “டையூ - டாமன் - தாத்ராநகர் ஹவேலி, அந்தமான் - நிக்கோபார் மற்றும் லட்சத் தீவின் தலைமை நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் பெயரும், குஜராத் முதலமைச்சர் பெயர் பட்டியலில் அடிபடுகிறது. 

பிரதமர் மோடியின் நண்பராக அறியப்படும் இவர், குடந்த 2007 ஆம் ஆண்டில் ஹிம்மத்நகர் தொகுதியில் முதன் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை குஜராத் உள்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார். தற்போது, லட்சத்தீவின் தலைமை 
நிர்வாகியாக இருக்கும் நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்துப் பேசி 
வந்தார். 

இந்த நிலையில் தான், குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.